‛காங்கிரஸூக்கு போடவா... திமுகவுக்கு போடவா...’ கேள்வி எழுப்பிய வாக்காளர்... குழம்பிப்போன ப.சிதம்பரம்!
திமுக வேட்பாளர் விலகிக் கொள்ள வேண்டும் என ப.சிதம்பரம் பேசிய நிலையில், ‛‛கட்சி சின்னத்தில் போட்டியிட தங்களுக்கு கடிதம் இருப்பதால், யார் எதிர்த்தாலும் தாங்கள் போட்டியிட்டே தீருவோம்...’
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் 9 ல் திமுகவும், 2 ல் காங்கிரஸ், 1 வார்டில் வி சி க வுக்கு என கூட்டணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 8 வது வார்டு ஆதிதிராவிடர் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டதில், அந்த வார்டு பொதுமக்கள் எதிர்ப்பால் போட்டியிட்ட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அங்கு மறுதேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4 வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சி சார்பில் தனபாக்கியம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் அன்புக்கரசி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இரு வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது . இருவரும் கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கியதால், அவர்களுக்கு உரிய சின்னம் வழங்கப்பட்டது. அதன் படி ஒரே வார்டில் திமுக வேட்பாளரும், கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளரும் களம் காண்கின்றனர். உதயசூரியன்-கை சின்னம் நேரடி மோதல் நடந்து வரும் நிலையில், இந்த விபரம் தெரியாமல், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கானாடுகாத்தான் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்றார்.
திமுக ஆட்சியை சிலாகித்தும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்டு அவர் பேசிக் கொண்டிருந்த போது, வாக்காளர் ஒருவர், ‛4 வது வார்டில் உதயசூரியன் , கை நிற்குது எந்த சின்னத்திற்கு ஒட்டு போடுவது...’ என கேள்வி எழுப்பினார். அதை கேட்டதும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஒரே குழப்பம் . அருகில் இருந்த வேட்பாளரின் கணவரிடம், விபரத்தை கேட்டார். அப்போது தான், அங்கு திமுக-காங்கிரஸ் இரு வேட்பாளர்கள் நேரடியாக மோதுவது தெரிந்தது.
உடனே உள்ளூர் அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளரான பெரிய கருப்பனை தொடர்பு கொண்டதாகவும், அவர் அளித்த விளக்கத்தின் படி, ‛இந்த வார்டில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடுவதாகவும், தவறுதலாக கட்சி கடிதம் வழங்கப்பட்ட திமுக வேட்பாளர், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை என்றும், அவருக்கு யாரும் பணி செய்ய வேண்டாம்’ என பொதுவெளியில் மைக் மூலம் அறிவித்தார் ப.சிதம்பரம்.
திமுக வேட்பாளர் விலகிக் கொள்ள வேண்டும் என ப.சிதம்பரம் பேசிய நிலையில், கட்சி சின்னத்தில் போட்டியிட தங்களுக்கு கடிதம் இருப்பதால், யார் எதிர்த்தாலும் தாங்கள் போட்டியிட்டே தீருவோம் என்று தீவிரமாக அந்த வார்டில் களம்காண்கிறார் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்