(Source: ECI/ABP News/ABP Majha)
NDA Govt: மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக.. நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு எடுத்த முடிவு!
மோடி தலைமையிலான அரசு அமைய சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர்கள் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மத்தியில் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர், மோடி தலைமையிலான அரசு அமைய ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி ஆட்சி அமைக்கும் பாஜக: தேசத்தின் எதிர்காலத்தை மக்களவை தேர்தல் முடிவுகள் தலைகீழாக திருப்பி போட்டுள்ளது. 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்த பாஜக, இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையை கூட பெற முடியவில்லை.
வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள், கருத்துக்கணிப்புகளை முற்றிலுமாக பொய்யாக்கியுள்ளது. பாஜக மட்டும் 300 தொகுதிகளுக்கு மேல் பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 370 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டது.
ஆனால், 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே, இந்த முறை ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் தயவை நாடியுள்ளது பாஜக. குறிப்பாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 12 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளமும் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசமும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க ஆதரவு தருவதற்கு பாஜகவுக்கு நிதிஷ் குமாரும் சந்திரபாபு நாயுடுவும் பல நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கண்டிஷன் போடும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்: குறிப்பாக, தமது கட்சிக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், விவசாயத்துறை அமைச்சகம், ஜல் சக்தி எனும் நீர்வளத்துறை அமைச்சகம் ஆகியவை தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் 3 கேபினட் அமைச்சர்கள் உட்பட 6 அமைச்சர்கள் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ்குமாரும் தங்களது கட்சிக்கு முக்கிய அமைச்சரவை இலாகாக்கள் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள், துணை பிரதமர் பதவிக்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
ஆனால், துணை பிரதமர் இல்லாவிட்டால், குறைந்தபட்சமாக 4 கேபினட் அமைச்சர்களாவது தங்களுக்கு வேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதுமட்டுமன்றி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கும் ஷிவ்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட சில பல, சிறுகுறு கட்சிகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக தலைமை தள்ளப்பட்டுள்ளது.