(Source: ECI/ABP News/ABP Majha)
Election 2024: ”மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின், விலை ரூ.8,552 கோடி மட்டுமே” - 21 பேர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
Loksabha election 2024: ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூட பாஜகவில் இணைந்தால், தூய்மையானவர்களாக மாற்றப்படுகின்றனர் என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
Loksabha election 2024: மோடி வாஷிங் பவுடராகவும், பாஜக வாஷிங் மெஷினாகவும் இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
மோடி வாஷிங் பவுடர் - காங்கிரஸ்:
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் சூழல் அரசியல் கட்சிகள் இடையேயான கருத்து மோதம் உச்சம் தொட தொடங்கியுள்ளது. பரஸ்பரம் ஒவ்வொரு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைய வேண்டும் என மிரட்டப்படுவதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”பாஜகவில் இணைந்தால் வழக்குகள் முடிக்கப்படும் என்ற கொள்கையுடன் செயல்படும் மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மிஷின் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறேன். அதோடு தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிய ரூ.8,522 கோடி தான் அந்த வாஷிங் மெஷினின் விலை” எனவும் விமர்சித்தார்.
”தாவூத் இப்ராகிமை கூட பாஜக தூய்மையாக்கும்”
தொடர்ந்து, ”உங்களுக்கு அறிமுகம் செய்து இருப்பது முழுமையான தானியங்கி வாஷிங் மெஷின். இது பாஜகவில் சேருங்கள், வழக்குகள் முடிக்கப்படும் என்ற கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது. ஊழல், மோசடி போன்ற அழுக்கு துணிகள் இதற்குள் சென்றால் சுத்தமானதாக வெளிவரும். இது பாஜவின் மோடி வாஷ். இந்த வாஷிங் மெஷின் அனைத்து வகையான ஊழல் கறைகளையும் சுத்தம் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மோடி வாஷிங் பவுடர் மட்டுமே பயன்படும். பிரதமரின் படத்துடன் கூடிய மோடி வாஷிங் பவுடர் அனைத்து கறைகளையும் ஒரு நொடியில் அகற்றிவிடும். நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால், அவரும் அடுத்த நொடியே அவர் குற்றமற்றவர் ஆகிவிடுவார். வாஷிங் மெஷினில் இருந்து வெளியே வரும்போது மாநிலங்களவை எம்பியாக கூட வரலாம்” எனவும் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
Watch: Congress leader Pawan Khera says, "No matter how stubborn the stain, this 'Modi Washing Powder' and BJP's 'Washing Machine' will clean it up. Its cost is 8552 crore rupees. pic.twitter.com/79cfuFjjyE
— IANS (@ians_india) March 30, 2024
தூய்மையாக்கப்பட்ட 21 பேர்:
மேலும், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 21 முக்கிய தலைவர்கள் பாஜக அல்லது பாஜக கூட்டணியில் இணைந்ததும் மோடி வாஷிங் மெஷின் மூலம் வெள்ளையாக்கப்பட்டு, சுத்தமாக்கப்பட்டுள்ளனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரபுல் பட்டேல், மேற்குவங்கத்தில் சுவேந்து அதிகாரி, ஜோதிராதித்ய சிந்தியா, மகாராஷ்டிரா மாநில மூத்த அரசியல் தலைவர்கள் நாராயண் ரானே, அஜித் பவார், சாகன் புஜ்பால் மற்றும் அசோக் சவான் ஆகியோரும் இந்த பட்டியலில் அடங்குவர். அப்படியானால் மேற்குறிப்பிட்ட நபர்கள் மீது பாஜக சுமத்திய குற்றங்கள் உண்மை இல்லையா? அல்லது காங்கிரஸ் கூட்டணி அரசு மீது சேறு பூசுவதற்காக மட்டுமே செய்யப்பட்டதா? அல்லது பாஜவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்களை மாற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா?” என பவன் கேரா அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.