Loksabha Election 2024: திருச்சியில் பிள்ளையார் சுழி போடும் எடப்பாடி பழனிசாமி! சூறாவளி பிரச்சாரத்திற்கு தயாரான அதிமுக!
மக்களவைத் தேர்தல் பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி தொடங்குகிறார்.
Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி தொடங்குகிறார்.
சூடுபிடித்த தேர்தல் களம்:
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வேட்புமனுத்தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக, தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, அவர்களுக்கான தொகுதிகளையும் உறுதி செய்துள்ளது.
திமுகவின் நிலை இப்படியென்றால், அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது. புரட்சி பாரதம் மட்டுமே, இதுவரை அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்க முடியாமல் கடுமையாக திணறிக் கொண்டு இருக்கிறது. தேமுதிக உடனான பேச்சு வார்த்தையை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. எனவே, வரும் நாட்களில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை அதிமுக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூறாவளி பிரச்சாரத்திற்கு தயாரான அதிமுக:
இப்படியான நிலையில், மக்களவைத் தேர்தல் பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி தொடங்குகிறார். வரும் 24ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை பரப்புரையை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி நவலூர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவிலில் வரும் 24ஆம் தேதி பரப்புரையை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி. அதனைத் தொடர்ந்து, 26ஆம் தேதி தூத்துக்குடி, 27ஆம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, 28ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், 29ஆம் தேதி காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர், 30ஆம் தேதி புதுச்சேரி, கடலூர், 31ஆம் தேதி சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி அடைந்திருந்தது. இம்முறை 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் திமுக தனது தேர்தல் வேளையை துவங்கி உள்ளது.
அதே நேரத்தில், தேமுதிக மற்றும் அதிமுக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை துவங்கி இருந்தாலும் இதுவரை அவர்கள் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் மட்டுமே தங்களது கூட்டணியை உறுதி செய்திருப்பதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத சூழலில் அதிமுக தலைமை சிக்கித் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.