Lok Sabha Polls Phase 2: முடிந்தது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 88 தொகுதிகள் - 61% - மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்
Lok Sabha Polls Phase 2: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
Lok Sabha Polls Phase 2: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மக்களவை தேர்தல் - 2ம் கட்ட வாக்குப்பதிவு:
நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் ஒட்டுமொத்தமாக சுமார் 60.96 சதவிகிதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.
குற்றச்சாட்டுகளும் - தேர்தல் ஆணைய தகவல்களும்:
கேரளாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. மறுபுறம் பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று, பொதுமக்கள் நிர்பந்திக்கப்பட்டதால் மணிப்பூரில் மறுவாக்குப்பதிவு நடத்த காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதனிடையே, இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தனது வாக்குப்பதிவு செயலியில் வெளியிட்ட தோராயமான புள்ளிவிவரங்களின்படி, மாநில வாரியான வாக்குப்பதிவின் அடிப்படையில், திரிபுரா அதிகபட்ச வாக்குப்பதிவை பெற்றுள்ளது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகியுள்ளன.
மாநில வாரியாக வாக்குப்பதிவு:
மாநிலம் | வாக்குப்பதிவு சதவிகிதம் |
அசாம் | 70.97% |
பீகார் | 54.91 % |
சத்தீஸ்கர் | 73.19% |
ஜம்மு | 71.91% |
கர்நாடகா | 67.77% |
கேரளா | 65.45% |
மத்திய பிரதேசம் | 57.55% |
மகாராஷ்டிரா | 54.58% |
மணிப்பூர் | 77.18 % |
ராஜஸ்தான் | 64.02% |
திரிபுரா | 78.82% |
உத்தரப்பிரதேசம் | 54.83% |
மேற்கு வங்காளம் | 71.84% |
வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகள்:
ராஜஸ்தானில் 13 மக்களவைத் தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஜம்மு தொகுதி, உத்தரப் பிரதேசத்தில் எட்டு இடங்கள், திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதி, அவுட்டர் மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி, அசாமில் 5 இடங்கள், மேற்கு வங்கத்தில் 3 இடங்கள் மற்றும் பீகாரில் ஐந்து தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
வயநாடு நிலவரம்:
ராகுல் காந்தி, சசி தரூர், கஜேந்திர சிங் ஷெகாவத், கைலாஷ் சவுத்ரி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 88 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். தேர்தல் ஆணையத்தின் தோராயமான புள்ளிவிவரங்களின்படி, கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட்ட தொகுதியான வயநாடு 69.51% வாக்குகளைப் பதிவு செய்தது. சசி தரூர் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் 63.86% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Democracy is under threat.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) April 26, 2024
This video is from TODAY in Ukhrul District, Outer Manipur. Voters are being forced to vote only for the NPF, the BJP’s alliance partner, rather than the Congress. The security forces are standing there mutely as our democracy is hijacked.
These are… pic.twitter.com/9KhycuP5jh
மோடியின் பாராட்டும் - காங்கிரஸின் எதிர்ப்பும்:
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ”பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வலுவான ஆதரவைப் தந்துள்ளனர். என்.டி.ஏ கூட்டண்யின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
அதேநேரம் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”மணிப்பூரில் வாக்காளர்கள் பாஜக கூட்டணிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என, நிர்பந்திக்கப்படுவதாக” வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.