Lok Sabha Elections 2024: 93 தொகுதிகளில் தொடங்கியது 3ம் கட்ட வாக்குப்பதிவு - வாக்களிக்கிறார் பிரதமர் மோடி..!
Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று நடைபெறுகிறது.
Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம்கட்டமாக, 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 19ம் தேதி 102 தொகுதிகளிலும், 26ம் தேதி 88 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து இன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்குப்பதிவு நடைபெற உள்ள 93 தொகுதிகள்:
முதலில் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் (EC) அறிவித்தது. இதனிடையே, பெட்டூல் தொகுதியில் வேட்பாளர் ஒருவர் இறந்ததால் அங்கு நடைபெற இருந்த தேர்தல் மே 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் தொகுதிகளின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது. இதனிடையே அனந்த்நாக்-ரஜோரியில் நடைபெற இருந்த தேர்தல் மே 25 க்கு ஒத்திவைக்கப்பட்டது மற்றும் மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருந்த சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனால் மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 93 ஆக குறைந்தது.
#WATCH | Maharashtra: Mock poll underway for the third phase of Lok Sabha polls; visuals from booth number 222 under Baramati Lok Sabha constituency
— ANI (@ANI) May 7, 2024
Maharashtra's 11 constituencies will undergo polling in the third phase of the 2024 general elections. #LokSabhaElections2024 pic.twitter.com/lcYctr8R98
தொகுதிகளின் விவரங்கள்:
அசாமில் 4 மக்களவை தொகுதிகள், பீகாரில் 5 மக்களவை தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 மக்களவை தொகுதிகள், தாத்ரா & நாகர் ஹாவேலி மற்றும் டாமன் & டையூவில் 2 மக்களவை தொகுதிகள், கோவாவில் 2 மக்களவை தொகுதிகள், குஜராத்தில் 25 மக்களவை தொகுதிகள், கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகள், மத்தியபிரதேசத்தில் 9 மக்களவை தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 மக்களவை தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 மக்களவை தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தில் நான்கு என மொத்தம் 93 மக்களவை தொகுதிகளில் மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் நூறுக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் உடன், மொத்தம் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதமர் வாக்களிக்கிறார்..!
இதையடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், குஜராத்தில் வாக்களிக்க உள்ளனர். அவர்களது வாக்குரிமை உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நட்சத்திர வேட்பாளர்கள்:
நட்சத்திர வேட்பாளர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர்களான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் திக்விஜய சிங் ஆகியோர் அடங்குவர். சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவும், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரும் பராமதி தொகுதியில் போட்டியிடுகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி தொகுதியில் களம் கண்டுள்ளார்.
இந்தக் கட்டத்துக்குப் பிறகு மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடையும். அடுத்த நான்கு கட்டங்கள் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி.