தஞ்சாவூரில் பாஜக வெற்றி பெற்றால் பல திட்டங்கள் நேரடியாக கிடைக்கும் - வானதி சீனிவாசன்
2014 ஆம் ஆண்டில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் தஞ்சாவூருக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளன.
தஞ்சாவூர்: மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமைவது உறுதி. இதேபோல, தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மோடியின் பல திட்டங்கள் இத்தொகுதிக்கு நேரடியாகக் கிடைக்கும் என்று வேட்பாளர் கருப்பு எம்.முருகானந்தத்தை ஆதரித்து வாக்கு சேசரித்த வானதி சீனிவாசன் உறுதியளித்தார்.
பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பேசியதாவது:
மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி
மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி அமைவது உறுதி. இதேபோல, தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் மோடியின் பல திட்டங்கள் இத்தொகுதிக்கு நேரடியாகக் கிடைக்கும். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக வெற்றி பெறாவிட்டாலும் தஞ்சாவூருக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளன.
பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, வங்கிக் கணக்கு தொடக்கம் என பல்வேறு திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், தமிழக அரசு விவசாயத்தை லாபகரமானதாக மாற்றவில்லை. நீர் மேலாண்மையிலும் பின்தங்கியுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்வதற்கு மத்தியில் அமையக்கூடிய அரசோடு இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு நல்ல திறமையான ஆற்றல் மிக்க இளைஞர் நமக்கு வேட்பாளராக கிடைத்திருக்கிறார். எனவே அவரை வெற்றி பெற செய்து சூப்பர் ஸ்டார் தொகுதியாக மாற்ற வேண்டும். தஞ்சாவூர் பொம்மைகள் மிகச் சிறப்பானது மிக அற்புதமானது என மோடி பேசிய பிறகு அதன் விற்பனை உயர்ந்துள்ளது.
விமான நிலையத்திற்கு ரூ.200 கோடி
தஞ்சாவூர் அடுத்தக்கட்ட வளர்ச்சியிலே விமான நிலையம் முக்கிய பங்களிக்கிறது. ரூ. 200 கோடி தஞ்சாவூர் விமான நிலையத்திற்கு தயாராக இருக்கிறது. எனவே தஞ்சை தொகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
ஆன்மீக சுற்றுலா தலம்
கலாசார முகமாக உள்ள தஞ்சாவூருக்கு எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் தஞ்சாவூரை ஆன்மீக சுற்றுலா தலமாக மாற்றி ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக எங்கே இருக்கிறது எனக் கேட்ட நிலையில், இப்போது தமிழக முதல்வர் உள்பட எல்லோரும் பிரசாரத்தில் பாஜகவை பற்றித்தான் பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், அமமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் வேலு. கார்த்திகேயன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.