Lok Sabha Election2024: திமுக - பாஜக தேர்தல் போர்..! ரத்தாகிறதா நெல்லை தொகுதி தேர்தல்...? களத்தில் நடப்பது என்ன?
காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து நெல்லை தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மாறி மாறி புகார்கள் கொடுத்து வருகின்றனர்.
வருமான வரித்துறை Vs பறக்கும்படை:
தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஒவ்வொரு கட்சியினரும் மக்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் தங்களது வாக்குறுதிகளை கூறியும், எதிர்கட்சிகளின் மீது குற்றச்சாட்டை முன்வைத்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். 4 முனை போட்டி இருக்கும் சூழலில் நெல்லையில் திமுக - பாஜகவின் அரசியல் விளையாட்டு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. உண்மையில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் பலரும் உள்ளனர். குறிப்பாக திமுகவினரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையை பொறுத்தவரை முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன் அலுவலத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சோதனையின் முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு ஒப்பந்ததாரான ஆர் எஸ் முருகன் என்பவரது அலுவலகத்தில் 5 நாளுக்கும் மேலாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதே போல பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆதரவாளரிடமிருந்து சென்னையில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து நயினார் நாகேந்திரன், அது என்னுடைய பணமில்லை, யாருடைய வேலை என்று தெரியவில்லை. இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை, எனது பெயருக்கு களங்கள் விளைவிக்கவே இது போன்று புகார் வந்துள்ளது என ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த நிலையில் தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரான கணேஷ் மணி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம், வேஷ்டி, பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதே போல 5 நாட்களுக்கு முன்பும் டி-ஷர்ட், தொப்பி, பேனா, சேலை போன்றவை நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்ததாக கூறப்பட்டது. இதில் கணேஷ் மணி என்பவர் தனது தொழில் மூலம் ஏற்கனவே கோடியில் புழங்க கூடியவர் என்றும் அனைவராலும் பரவலாக பேசப்படுவர் என்றாலும் தேர்தல் நேரத்தில் பணத்துடன் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது அனைவருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளது. போட்டி அரசியல் காரணமாகவே திமுகவினர் மீதான சோதனையும், பாஜக வேட்பாளர் மீதான தேர்தல் புகார்களும் தொடர்ச்சியாக எழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் நெல்லையை பொறுத்தவரை திமுக-பாஜகவின் தேர்தல் விளையாட்டு யுத்தம் தொடங்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரனை குறி வைக்க இதுதான் காரணமா?
நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். அதோடு 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அதோடு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். நெல்லையை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொகுதியில் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் பெற்றது அனைவரிடத்திலும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரான டிபிஎம் மைதீன்கான் பேசும் போது, எதிர்த்து போட்டியிடும் நயினார் நாகேந்திரன் எல்லோருக்கும் வணக்கம் போடுபவராக இருக்கலாம், நமக்குள் நல்ல உறவு இருக்கலாம், ஆனால் அரசியல் என்று வந்து விட்டால் நீ வேறு! நாங்கள் வேறு ! நமக்குள் சமரசம் செய்து கொள்ள கூடாது என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார், அதோடு உறவை சொல்லி வரும் போது ஏமாந்து விடக்கூடாது என பேசினார். அந்த அளவிற்கு அரசியல் தாண்டி, கட்சி தாண்டி அனைவரின் மத்தியிலும் நல்ல உறவை கொண்டிருப்பவர். நெல்லை தேர்தல் களம் காங்கிரசுக்கு சாதகமாக இருந்த நிலையில் தற்போது பாஜகவின் கை ஓங்கி வருவதாலும், அவருக்கு வெற்றி முகம் இருக்கிறது என்பதாலும் பொதுக்கூட்ட மேடையில் திமுகவின் மூத்த தலைவர் இவ்வாறு பேசியுள்ளார் என்கின்றனர். பலரும்.
பாஜக வழக்கறிஞர் அணி மற்றும் இந்து முன்னணி சார்பில் திமுக அலுவலகத்தில் 30 லட்சம், 30 கோடி என பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்கின்றனர், ஆனால் அந்த விவரங்களை தேர்தல் அலுவலகம் தெரிவிக்கவில்லை, இந்த விவகாரத்தை திசை திருப்பவே பாஜக வேட்பாளர் ஆதரவாளர்களிடம் சோதனை நடத்துகின்றனர். காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு வைத்திருக்கலாம். எனவே நெல்லை காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். இந்த நிலையில் நேற்றும் பாஜக வேட்பாளரின் கார் மற்றும் பிரச்சார வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர், தொடர்ச்சியாக காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாஜக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து நெல்லை தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் மாறி மாறி புகார்கள் கொடுத்து வருகின்றனர். திமுக - பாஜகவின் தேர்தல் போர் நடந்து வரும் நிலையில் நெல்லை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது.