Lok Sabha Elections: பிரதமர் மோடியை எதிர்க்கும் அஜய் ராய், ராகுலை எதிர்க்கும் சுரேந்திரன் - யார் இந்த வேட்பாளர்கள்?
Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து அஜய் ராய் என்பவரும், ராகுல் காந்திக்கு எதிராக சுரேந்தர் என்பவரும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் பரப்புரைகளால் நாடு முழுவதும் அனல் பறக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் பாஜகவை வீழ்த்த முற்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியின் முகமாக ராகுல் காந்தி சூறாவளி பரபுரையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக, முறையே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் அஜய் ராய்:
வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் நரேந்திர மோடியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் களமிறக்கப்பட்டுள்ளார். 54 வயதான இவர் பூர்வாஞ்சல் (கிழக்கு உத்தரப்பிரதேசம்) பிராந்தியத்தில் 'பாகுபலி' என்று அறியப்படுகிறார். கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் அஜய் ராய் தான், காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால், இரண்டு தேர்தல்களிலும் அவர் மூன்றாவது இடத்தையே பிடித்தார். இருப்பினும், இந்த தேர்தலில் மோடிக்கு அவர் கடும் நெருக்கடி கொடுப்பார் என கருதப்படுகிறது.
அஜய் ராயின் அரசியல் வாழ்க்கை பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ABVP) இருந்தே தொடங்கியது. 1996, 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் கோலஸ்லா தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் மூன்று முறை எம்எல்ஏவாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்த அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2012ல் காங்கிரஸில் சேர்ந்தவர், பிந்த்ரா (முந்தைய கோலாஸ்லா) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், 2017 மற்றும் 2022 தேர்தல்களில் தோல்வியையே சந்தித்தார்.
ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் சுரேந்திரன்:
இதனிடயே, ராகுல் காந்தியோ தென்னிந்தியாவைச் சேர்ந்த கேரள மாநிலத்தில் உள்ள, வயநாடு தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அந்த மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி மற்றும் அமேதியைப் போலவே கேரளாவின் வயநாடு தொகுதியும் வரலாற்று ரீதியாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் வயநாட்டில் காங்கிரஸ் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சுரேந்திரன், 2009 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். நான்குமுறை சட்டமன்றத் தேர்தல்களிலும் களமிறங்கியுள்ளார். 2021ல் ஒரே நேரத்தில் கொன்னி மற்றும் மஞ்சேஷ்வர் தொகுதிகளில் போட்டியிட்டார். 2016ல் சுரேந்திரன் மஞ்சேஷ்வர் தொகுதியில் வெறும் 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் தோல்வியையே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.