Lok Sabha Election: இணையதளங்களில் விதிகளை மீறி பாஜக விளம்பரம்? - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
Lok Sabha Election: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பாஜக விதிகளை மீறி, இணையத்தில் விளம்பரம் செய்வதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகாரளித்துள்ளது.
Lok Sabha Election: பாஜக வெற்றிக்கு வாழ்த்துகள் என்ற வார்த்தைகள், தனியார் இணையதள பக்கத்தில் விளம்பரங்களாக ஒளிபரப்பப்படும் ஆதாரங்கள் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
பாஜக இணையத்தில் விளம்பரம்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், பாஜக நடத்தை விதிகளை மீறி இணையதள பக்கங்களில் விளம்பரம் செய்வதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது. அதன்படி, போல்சர்வே என்ற இணைய பக்கத்தில் தலைப்புப் பகுதியிலும், அடிப்பகுதியிலும், ”பாரதிய ஜனதா கட்சி, மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பதை குறிக்கும் வகையிலான புகைப்படங்கள், பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள், பாஜக தேர்தல் போனஸ்” என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இணையத்தில் பாஜக விளம்பரம் என திமுக குற்றச்சாட்டு
திமுக தேர்தல் ஆணையத்தில் புகார்:
இந்த தகவல்களை சமூக வலைதலங்களில் ஷேர் செய்தால் பரிசுத்தொகை கிடைக்கும் என்பன போன்ற விளம்பரங்களும் உள்ளன. இவை, விளம்பரம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 I இன் பிரிவு 123 ஐ தெளிவாக மீறுகிறது என திமுக குற்றம்சாட்டியுள்ளது. விதிகள் என்பது வேட்பாளருக்கு மட்டுமல்ல, அரசியல் கட்சிக்கும் பொருந்தும் என்பதை, 2024 மாதிரி நடத்தை விதிகள் பற்றிய அறிவுறுத்தல்களின் தொகுப்பு மிகவும் திட்டவட்டமாக விளக்குகிறது. தேசிய கட்சி ஒன்று விளம்பரத்தில் தேர்தல் போனஸ் என கூறுவது நிச்சயமாக, பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களை நேரடியாக பணம் வழங்குவது போன்று தான் உள்ளது. உண்மையில் இது ஒரு ஊழல் நடைமுறையாகும். எனவே, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, பாஜக மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது,