Lok Sabha Election Result 2024: அடடே! 25 வயதிலே எம்.பி.யான 4 பேர், 3 இளம் பெண்கள் - யார் இவர்கள்?
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இளம் வயதில் வென்று, எம்,பிக்கள் ஆன 4 வேட்பாளர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Lok Sabha Election Result 2024: மக்களவை தேர்தலில் வெறும் 25 வயதிலேயே போட்டியிட்டு, 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிவுகள்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. இதனிடையே, சில வேட்பாளர்கள் 7 லட்சம் தொடங்கி 11 லட்சம் வரையிலான வாக்கு வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனை படைத்து உள்ளனர்.
அதேநேரம், சிலர் இரட்டை இலக்கு வாக்கு வித்தியாசத்திலும் வென்றுள்ளனர். இந்நிலையில், வெறும் 25 வயதில் வேட்பாளர்களாக களமிறங்கி, மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 3 இளம் பெண்கள் உட்பட 4 பேரின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சாம்பவி சவுத்ரி - சமஸ்திபூர் தொகுதி:
பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் அமைச்சராக உள்ள அசோக் சவுத்ரியின் மகள் சாம்பவி சவுத்ரி, சமஸ்திபுரி தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சன்னி ஹசாரியை 1.87 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சன்னி ஹசாரி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அமைச்சரான மகேஷ்வர் ஹசாரியின் மகன் ஆவார். பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் பரப்புரை மேற்கொண்டு உரையாற்றியபோது, சாம்பவியை தங்கள் கூட்டணியின் இளம் வயது வேட்பாளர் என பாராட்டினார். தனது குடும்பத்தைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியான சாம்பவி சவுத்ரிக்கு வயது வெறும் 25 மட்டுமே ஆகும்.
சஞ்சனா ஜாதவ் - பரத்பூர் தொகுதி
ராஜஸ்தானின் பரத்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சஞ்சனா ஜாதவ் வெற்றி பெற்றார். 25 வயதான அவர் பாஜகவின் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் 2023 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டார், ஆனால் பாஜகவின் ரமேஷ் கேடியிடம் வெறும் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சஞ்சனா ராஜஸ்தான் போலீஸ் கான்ஸ்டபிள் கப்டன் சிங்கை என்பவரை மணந்தார்.
புஷ்பேந்தரா - கவுசம்பி தொகுதி:
புஷ்பேந்திர சரோஜ் பாஜக வசம் இருந்த கௌசாம்பி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து, சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு அரசியல் போர்க்களத்தில் நுழைந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 103,944 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக எம்பி வினோத் குமார் சோங்கரை தோற்கடித்து அவர் வெற்றி பெற்றார். புஷ்பேந்திரா 5 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், உத்தரபிரதேச முன்னாள் அமைச்சருமான இந்தர்ஜித் சரோஜின் மகன் ஆவார்.
பிரியா சரோஜ் - மச்சிலிஷாஹர் தொகுதி:
பிரியா சரோஜ் மச்சிலிஷாஹர் தொகுதியில் 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பாஜக எம்பியான போலாநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். பிரியா மூன்று முறை எம்பியாக இருந்த தூபானி சரோஜின் மகள் ஆவார். பிரியா வழக்கறிஞர் படிப்பை முடித்து, உச்சநீதிமன்றத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.