Lok sabha election 2024: விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்
வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர தேர்தல் பொருட்கள் வழங்கப்படும் - மாவட்ட தேர்தல் அலுவலர்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
மண்டல அலுவலர்கள் தங்களது மண்டலத்திற்குடப்ட அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரிடையாக ஆய்வு மேற்கொண்டு அந்த வாக்குச்சாவடியில் குடிநீர் வசதி, சாய்தள வசதி. கழிப்பறை வசதி, செல்போன் சிக்னல் உள்ளதா, கட்டிடம் நல்ல நிலையில் உள்ளதா, தளவாடச் சாமான்கள் உள்ளதா, மின்விளக்கு, மின்விசிறிகள் உள்ளனவா போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் 2024 - பயிற்சிக்கூட்டம்
அதேபோல், மண்டலத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் தங்களது மண்டல காவல் அலுவலருடன் கூட்டுப்புலத்தணிக்கை மற்றும் கள விசாரணை மேற்கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றத்திற்கு காரணமான நபர்களை கண்டறிந்திட வேண்டும். அது தொடர்பான அறிக்கையினை தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்திட வேண்டும். மண்டல அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை செயல்படுத்தும் முறை குறித்த நேரடிப்பயிற்சியில் மண்டல அலுவலர்களும் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமான தேர்தல் சம்மந்தமான அனைத்து அறிக்கை, படிவங்கை எவ்வாறு பூர்த்தி செய்தல் என தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மேலும், வாக்குப்பதிவு கருவி, கட்டுப்பாட்டுக் கருவி, VVPT போன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது மற்றும் சின்னம் பொருத்தும் பணி, வேட்பாளரின் எண்ணிக்கை உள்ளிட்ட வாக்குப்பதிவு மேற்கொள்வதற்கான அனைத்து பணிகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மேலும், வாக்குப்பதிவு இயந்திரம் விநியோகிக்கும் மையத்தின் மூலம், வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் கையேட்டில் குறிப்பிட்டவாறு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்தல் வேண்டும். மேலும், தங்கள் வாக்குச்சாவடிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
பயிற்சிகள்
வாக்குப்பதிவிற்கு தேவையான டெண்டர் வாக்குச்சீட்டுகள், பார்வையற்றோருக்கு உதவும் வாக்குச்சீட்டு, வாக்காளர் விவர பதிவேடு, வாக்காளர் பட்டியல் படிவம் 17சி, வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கான நாட்குறிப்பு போன்றவை சரியாக உள்ளதா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மேலும், வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர தேர்தல் பொருட்கள் வழங்கப்படும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், வாக்குப்பதிவு நாளன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைய நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான அனைத்து பணிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும், தேர்தல் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் குறித்த விவரங்களை மண்டல அலுவலர்களுக்கு இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.