கடைசி நாளான இன்று தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக - பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
நாங்கள் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப்பிடம் தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை சுயேச்சை வேட்பாளர்கள் தேமுதிக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த திமுக வேட்பாளர்
இன்று 27ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளில் திமுக வேட்பாளர் முரசொலி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்டு தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
பேரணியாக புறப்பட்டார்
பின்னர் அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தார். பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டர்மான தீபக் ஜேக்கப் இடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது எம்பி எஸ் எஸ் பழனிமாணிக்கம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்பு மனுதாக்கல்
வேட்பாளர் முரசொலியுடன் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் தஞ்சாவூர் எம்எல்ஏவான டி கே ஜி நீலமேகம், எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர்.
பொதுமக்கள் வேதனை
திமுக வேட்பாளர் முரசொலி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், மக்களுக்கு இடையூறின்றி, போக்குவரத்தை சீர் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு போக்குவரத்தை தடை செய்வது போல் இருந்தால் சரியானதா என்று குற்றம் சாட்டினர்.
பாஜக வேட்பாளர் வாக்குவாதம்
கலெக்டர் அலுவலகத்திற்கு காலை 11.30 மணிக்கு பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வந்தார். பின்னர் தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப் அறைக்குள் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ஐந்து பேர் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது வாசலில் இருந்த போலீசார் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியதால் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் வாக்குவாதம் செய்தார். நாங்கள் 12 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை என்பதாலும் 12 மணி முதல் 1.30 மணி வரை ராகு காலம் என்பதால் அதற்கு முன்னதாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய அவசரப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் அறைக்குள் நுழைந்தபோது வேட்பாளர் கருப்பு முருகானந்தத்துடன் கூடுதல் நபர் இருப்பதை பார்த்த தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான தீபக் ஜேக்கப் கூடுதல் நபர் வெளியேறினால்தான் மனு வாங்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பாஜக தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் நேதாஜி அங்கிருந்து வெளியேறினார். பின்னர் வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.