Lok Sabha Election 2024: தாரை தப்பட்டையுடன் வந்து பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் வேட்புமனு தாக்கல்
200 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இறுதி நாளில் தாரை தப்படையுடன் ஊர்வலமாக வந்து பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் முதற்கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக , சுயேட்சை மற்றும் பல இயக்கங்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் , மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக வேங்கிகால் ஆவின் பண்ணை அருகில் இருந்து 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடை சூழ மயிலாட்டம் , சிலம்பாட்டத்துடன் ஊர்வலமாக அஸ்வத்தாமன் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே கூட்டத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் ஆட்சியர் அலுவலகம் வந்த அஸ்வத்தாமன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.