Lok Sabha Election 2024: #அக்கா1825 என்ற தலைப்பில் வாக்குறுதிகள் - தென் சென்னைக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழிசை!
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் #அக்கா1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.
#அக்கா1825 என்ற தலைப்பில் தென் சென்னைக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன்.
தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் #அக்கா1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். 5 ஆண்டுகள் * 365 நாட்களும் பணியில் இருப்பேன் என்ற உறுதியின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திராவிட மாடல் என்ற பெயரில் உணர்ச்சிகரமான பேச்சு மட்டுமே உள்ளது. விஞ்ஞானப்பூர்வமான, தொலைநோக்குத் திட்டங்கள் வளர்ச்சிகரமான திட்டம் எதுவும் தமிழகத்தில் இல்லை. தென் சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மட்டுமே உள்ளது. வளர்ச்சித் திட்டங்களே இல்லாத தொகுதி தென்சென்னைதான்.” என தெரிவித்தார்.
தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட தேர்தல் அறிக்கை:
தென் சென்னையின் 6 சட்டப்பேரவை தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தியாகராய நகர் மயிலாப்பூர், வேளச்சேரி. சோழிங்கநல்லூர் ஆகிய 6 தொகுதிகளிலும் எம்.பி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் குறைகள் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் பெறப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனி மொபைல் செயலி, மற்றும் வாட்சப் எண் (9550999991) மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் மற்றும் மழைநீர் பிரச்சினைக்கு தீர்வு:
பிரச்சனை:
தென் சென்னை மக்கள் சந்தித்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் தற்காலிக தீர்வுக்குப் பதிலாக நிரந்தர தீர்வு தேவை. மழைக்காலங்களில் வீதிகளில் மழை நீர் தேங்குவதால் தென் சென்னை மக்கள் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தீர்வு காண வாக்குறுதிகள்:
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கோதாவரி ஆற்றுநீரை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நான் தெலுங்கானா ஆளுநராக இருந்தபோதே இதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டேன் (ஆதாரம் இந்து நாளிதழ் மார்ச் 5.2020).
மத்திய நீர்வள அமைச்சகம் மற்றும் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்படும். பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், அரசன்கழனி, கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, புதுதங்கல், வெட்டுவான்சுனி, நீலாங்கரை, கோவிலம்பாக்கம், அக்கரை, நாராயணபுரம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்கள் உட்பட மொத்தம் 25 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு மீட்டெடுக்கப்படும்.
சோழிங்கநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து மழை நீர் ஒக்கியம் மடுவு வரை செல்ல மிகப்பெரிய அளவில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படும். விருகம்பாக்கம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து துரைப்பாக்கம் 200 அடி சாலை வழியாக பக்கிங்காம் கால்வாய் வரை பெரிய அளவில் மழை நீர் கால்வாய் அமைக்கப்படும். மேடவாக்கம் பகுதியில் இருந்து மழை நீர் பக்கிங்காம் கால்வாய் வரை செல்ல பெரிய அளவில் கால்வாய் அமைக்கப்படும். உடனடி உதவிக்கான திட்டம் மழைக்காலங்களில் உடனடியாக உதவிக்கு வருவோர் பிரிவு (First responders project) அசோக் நகர், வேளச்சேரி, செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும். மீட்பு படகுகள், மருத்துவப் பொருட்கள், உயர் சக்தி கொண்ட நீரேற்றும் பம்புகள், மீட்பு டிரக்குகள் ஆகியவற்றை கொண்ட முதல் பதிலளிப்போர் முற்றம் (First responders yard) உருவாக்கப்படும்.
போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு:
பிரச்சனை: போக்குவரத்து நெரிசல்
தீர்வு காண வாக்குறுதிகள்:
புதிய வழித்தடத்தில் மெட்ரோ.3 திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தென் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில்-2 திட்டப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து தென் சென்னை தொகுதிக்குள் வட்ட / லூப் வழித்தடங்கள் தொடங்கப்படும் மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் இந்த வழித்தடங்களில் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
பெண்களுக்கான நல திட்டங்கள்:
- பெண்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். ஆண்டுக்கு 10,000 பெண்களுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்புகளுடன் பயிற்சி அளிப்பதை இந்த மையங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கும்.
- பணிபுரியும் பெண்களுக்காக மோடி இலவச ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும்.
- பொதுமக்கள் தங்கள் குடும்ப விழாக்களையும், சமூக விழாக்களையும் குறைந்த கட்டணத்தில் நடத்திக் கொள்வதற்கு ஏற்ப தென் சென்னையின் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆறு சமுதாயக் கூடங்கள் (திருமண மண்டபங்கள் அமைக்கப்படும்.
- குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- குறைந்த வருவாய் உள்ளவர்கள் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்த வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வெளியிட்டார்.