(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: நாம் தமிழர் கட்சியின் சேலம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வந்த கார் உட்பட மூன்று கார்களை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக, அதிமுக, சுழற்சிகள் என பல்வேறு கட்சிகள் நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்தநிலையை இன்றைய தினம் நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் வருகை தந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் மருத்துவர் மனோஜ் குமார் வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பாக மூன்று சொகுசு கார்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தங்களது ஆதரவாளர்களை ஊர்வலமாக அழைத்து வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வர முயன்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் வந்த கார் உட்பட மூன்று கார்களை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து சேலம் மாநகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வேட்பாளர் முரளி சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். சைக்கிளில் வருகை தந்து வேட்பு மனு தாக்கல் செய்தது அனைவரையும் கவர்ந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் அவர்கள் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உத்தரப்பிரதேச ஆட்சியைப் பிடித்தார். அதேபோல நானும் சைக்கிளில் வலம் வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றிப்பெற்று நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாடுபடுவேன் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைக்கிளை சுற்றி சுழன்று ஓட்டி காண்பித்தார்.