Lok sabha election 2024: நாடாளுமன்றத் தேர்தல்...மயிலாடுதுறை தொகுதியில் மல்லுக்கட்டும் 17 வேட்பாளர்கள்....!
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. ஜீன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் தற்போது களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தொகுதி விபரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி), 161 - மயிலாடுதுறை, 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும் 172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குசாவடிகள் விபரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன.
பதட்டமான வாக்குசாவடிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குசாவடிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குசாவடிகளும் என மொத்தம் 89 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குசாவடிகளுக்கு நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குசாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.
வாக்குப்பதிவு அலுவலர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 4213 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம திருவிடைமருதூர், பாபநாசம், கும்பகோணம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 4346 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், இலவசங்கள் வழங்குதல், மதுபானங்கள் அளித்தல், சட்டத்திற்கு புறம்பாக மது, போதை பொருட்களை கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டுப்பாடுகள்
50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்கம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அதேபோன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிசுபொருட்கள் எடுத்துச்செல்ல கூடாது. வங்கிபரிவத்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பொருத்த வரையை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புகார் தெரிவிக்க எண்கள்
பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்களை 1800 425 8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04364 -211722 என்ற தொலைபேசி எண்ணிலும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு 0435-240187 என்ற எண்ணிலும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு 0435-2430101 என்ற எண்ணிலும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 04374-222456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதேபோன்று காவல்துறையை பொறுத்தமட்டில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையினை 9488417100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்கள் அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் தீர்வு மேற்கொள்ளப்படும்.
வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான விவரங்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வாக்காளர் தொடர்பு மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான விபரங்களை 1950 என்ற கட்டணிமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
வழக்கு பதிவு
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியோர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இதுவரை 3705 சுவர் விளம்பரங்களும், 6863 சுவரொட்டிகளும், 1176 பதாகைகளும், 758 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலையான கண்காணிப்பு குழுவின் வாகன சோதனைகளில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதாக இதுவரை 31,74,145 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலக் கணக்கில் செலுத்தப்பட்டத்தில் உரிய ஆவணங்கள் அடிப்படையில் 4,78,717 ரூபாய் உரிய நபர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
சின்னம் ஒதுக்கீடு & தபால் வாக்கு
போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 12 டி தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு, தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும், 10478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12டி தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி, தன்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் தன்படம் பதாகை,மகளிர் சுய உதவிக்குழுவினரின் ரங்கோலி கோலம் இடுதல், வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இத்தேர்தலில் வாக்காளர்கள் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.