Lok Sabha Election 2024: தேனி தொகுதியில் திடீர் ஜெயலலிதா மகள்.. யாருடனும் கூட்டணி இன்றி சுயேச்சை வேட்பாளராக களம்!
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சொல்லிகொண்டு திரியும் ஜெயலட்சுமி என்ற பெண், நேற்று தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மகள் என்று கடந்த சில தினங்களாக மீடியா கண்ணில் தென்படும் ஜெயலட்சுமி என்ற பெண் தேனி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், யாருடனும் கூட்டணி வைக்காமல் சுயேச்சையாக போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024:
நாடே எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்தது. இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தமுள்ள 40 தொகுதிகளில் இதுவரை 1437 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை தொடர்ந்து, வருகின்ற ஏப்ரல் 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது.
நேற்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அதன்படி, நேற்று பாஜக தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்ட பல முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். அந்தவகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக சொல்லிகொண்டு திரியும் ஜெயலட்சுமி என்ற பெண், நேற்று தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மகள் என கூறி வரும் ஜெயலட்சுமி:
வேட்புமனுவை தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரேமா என்ற ஜெ.ஜெயலட்சுமி என்கிற நான் உங்கள் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் மகள். நான் தேனி தொகுதியில் போட்டியிட போகிறேன். அதனால் இங்கு மனுதாக்கல் செய்ய வந்திருக்கிறேன்.
தேனி தொகுதிக்கு இப்போதுதான் வந்துள்ளேன். எல்லா சின்ன சின்ன கிராமத்திற்கும் சென்று, என்ன குறைகள் இருக்கிறதோ அதை சரி செய்வேன். அம்மா நிறைய திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறார்கள், இப்போது இருக்கும் ஆட்சியாளர்களும் சரி, இதற்கு முந்தைய ஆட்சியாளர்களும் சரி, அதை சரிவரை நிறைவேற்றவில்லை. எனவே, அத்தகைய திட்டத்தை கையில் எடுத்து சரிசெய்ய போகிறோம்.
எந்த கட்சி சார்பாகவும் போட்டியிடவில்லை. சுயேட்சையாகவே தேனி தொகுதியில் போட்டியிட போகிறேன். எம்.ஜி.ஆர்., அம்மா மக்கள் கழகம் என்ற கட்சியை தொடங்கினேன். அதற்கான பதிவு எண் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், சுயேச்சையாக நின்று வெற்றிபெற போகிறோம்.
தேனி தொகுதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்டிமென்டான தொகுதி. எப்போதும், அவருக்கு தேனி மக்கள் என்றால் தனிபாசம். இந்த மாவட்டத்தில் சில மக்கள் என்னிடம் வந்து இந்த தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார்கள். அதன் காரணமாக தேனி தொகுதியை தேர்வு செய்தேன்” என்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, ஜெயலலிதா தங்களுக்குதான் சொந்தம் என அதிமுக, அமமுக என்ற கட்சிகள் சொந்தம் கொண்டாடுகிறது. இதுபோக, அவரது ஆன்மாவை கையில் எடுத்து ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலே சென்று சசிகலா, தீபா தற்போது ஜெயலட்சுமி என அடுத்தடுத்து புது உறவுகள் சொந்தம் கொண்டாடி மக்களை தங்கள் பக்கம் திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.