Lok Sabha Election 2024: எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய குடிமகனால் சலசலப்பு!
Lok Sabha Election 2024: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது நடிகர் அனுமோகனிடன், போதையில் இருந்த நபர் எழுப்பிய கேள்வியால் சலசலப்பு ஏற்பட்டது
Lok Sabha Election 2024: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பரப்புரையின் போது, போதையில் கேள்வி எழுப்பிய நபரை கட்சி நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர்.
மக்களவை தேர்தல் பரப்புரை:
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், அதிமுக சார்பில் இரோடு தொகுதியில் ஆற்றல் அசோக் குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக 102 தொகுதிகளில் நடைபெற உள்ள வாக்குப்பதிவில் களம் காணும் , ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் ஆற்றல் அசோக்குமார் இரண்டாவது மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் ஆவார். இந்நிலையில் அவரை ஆதரித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களான திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயகுமார், நடிகர் அனுமோகன், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் பள்ளிபாளையம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பகுதிகளான காவேரி ஆர் எஸ், ராஜம் தியேட்டர் பகுதிகள் மற்றும் குமாரபாளையம் நகர பகுதியான பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர்.
திமுக அரசின் மீது குற்றச்சாட்டு:
அப்போது பேசியவர்கள்,” மின்சார கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு குடிநீர் வரி உயர்வு விலைவாசி உயர்வு என அனைத்திற்கும் திமுக அரசே காரணம் எனவும், நீட் தேர்வு விளக்கு தருவதாக பொய் கூறி ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள். அதனால் பல குடும்பங்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வீட்டு வரி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்” குற்றம்சாட்டினர். திமுக ஆட்சியில் தற்போது அவல நிலையில் மக்கள் இருப்பதாக கூறியும், அவர்கள் குடும்ப அரசியல் செய்ததாகவும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து விட்டதால் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளதாகவும் சாடினர். எனவே அதிமுக வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மனோரமா முதல் அனுஷ்கா வரை... சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்...
குடிமகனால் சலசலப்பு:
தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டபோது, எடப்பாடி ஒருவரே தமிழகத்தில் முதல்வராக இருக்க தகுதி வாய்ந்தவர் என நடிகர் அனுமோகன் பேசினார். அப்போது கூட்டத்தில் குறுக்கிட்ட குடிமகன் எனது முதல்வரை முடிவு செய்ய நீ யார் என அனுமோகனிடம் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கூச்சலிட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிமுக கட்சித் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து குடிமகனை அப்புறப்படுத்தினர். இதையடுத்து மீண்டும் அவர்கள், ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.