DMK: திமுக களமிறங்கும் தொகுதிகள் எது? எது? உத்தேசப்பட்டியல் இதோ!
Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகின்றது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கபடாத நிலையிலேயே தமிழ்நாடு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் தேர்தலைச் சந்தித்தது. ஆனால் இம்முறை திமுக தலைமையிலான கூட்டணியில் மாற்றம் எதுவும் இல்லாமலும், அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தனது தலைமையில் தனியாக கூட்டணியை உண்டாக்கி வருகின்றது.
I.N.D.I.A கூட்டணி
அதிமுக மற்றும் பாஜக தங்களது கூட்டணியில் யார் யார் இடம் பெறுகின்றனர் என இதுவரை முடிவு செய்யாத நிலையே உள்ளது. தமிழ்நாடு தேர்தல் களத்தில் கூட்டணியில் யார் யார் அங்கம் வகிக்கின்றனர், யாருக்கு எவ்வளவு தொகுதி என தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் கூட்டணி என்றால் அது திமுக கூட்டணிதான். கடந்த 2019 மக்களவைத் தேர்தலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் தேர்தலைச் சந்தித்த திமுக கூட்டணி இம்முறை I.N.D.I.A கூட்டணி என்ற பெயரில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், திமுக தனது தலைமையின் கீழ் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை வழங்கியுள்ளது. மீதம் உள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகின்றது.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியுள்ள 19 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியுடன் சேர்த்து 10 தொகுதிகளும், விடுத்லைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இந்த மூன்று கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (நாமக்கல்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ராமநாதபுரம்) கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இது இல்லாமல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்ய சபா தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
திமுக களமிறங்கும் 21 தொகுதிகள்?
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை ஒதுக்கப்பட்டுள்ளதோடு யார் யார் எந்ததெந்த தொகுதியில் களமிறங்கவுள்ளனர் என்பது குறித்து இதுவரை முழுமையான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் திமுக நேரடியாக களமிறங்கவுள்ள 21 தொகுதிகள் எவைஎவை என்ற உத்தேச பட்டியல் குறித்து அரசியல் வட்டத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. குறிப்பாக திமுக தலைநகர் சென்னையை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் நேரடியாக தானே களமிறங்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் சென்னையை சுற்றியுள்ள தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் திருவள்ளூர் (கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்டது) தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.
திமுக களமிறங்கவுள்ள 21 தொகுதிகள் எவையெவை என்ற உத்தேசப் பட்டியல்:
- வடசென்னை
- தென் சென்னை
- மத்திய சென்னை
- ஸ்ரீபெரும்புதூர்,
- காஞ்சிபுரம்,
- அரக்கோணம்
- திருவண்ணாமலை,
- வேலூர்
- கடலூர்
- தருமபுரி
- பெரம்பலூர்
- கள்ளக்குறிச்சி
- ஈரோடு
- சேலம்
- கரூர்
- நீலகிரி
- பொள்ளாச்சி
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
மேலே உத்தேசமாக குறிப்பிட்டுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என கூறப்படுகின்றது. மேலும் வேட்பாளர்கள் யார் யார் என்பதை திமுக தலைமை நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.