Lok Sabha Elections 2024 TN: தொகுதிப் பங்கீடு ஓவர் - இவங்க 3 பேர் மட்டும் வேணாம்! - காங்கிரஸ்க்கு லிஸ்ட் போட்ட திமுக?
Lok Sabha Elections 2024 TN: காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாற்றினால், அவர்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lok Sabha Elections 2024 TN: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், இன்றோ அல்லது நாளையோ இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
களைகட்டும் மக்களவைத் தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், ஏற்கனவே அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் கட்டமைத்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. இதையடுத்து எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு:
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. விசிகவிற்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுபோக, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான தொகுதி விவரங்கள் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
வேட்பாளர்களை மாற்றுமா காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போதும், திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறையும் இதே தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கரூர், திருச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க, திமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
3 எம்பிகளுக்கு ”நோ” சொல்லும் திமுக:
கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதி மணியும், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசும், திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமாரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு இவர்கள் திமுகவினருக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை எனவும், தொகுதியிலும் பெரியதாக பணி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜோதிமணி, திருநாவுக்கரசர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு பதிலாக, அந்த தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களை அறிவிக்க திமுக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், ஜோதிமணி மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர், காங்கிரசில் முக்கிய மற்றும் பிரபலமானவர்களாக உள்ளனர். அதோடு, ராகுல் காந்திக்கும் நெருக்கமானவர்கள் என்பதால், அவர்களுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படலாம் என காங்கிரஸ் தரப்பு தெரிவிக்கின்றன.