Lok Sabha Election 2024: விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்..!
மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக தரப்பில் விஜயகாந்த் மகன் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார்.
வருகின்ற மக்களவை தேர்தலில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற்றார் விஜய பிரபாகரன். அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் விருப்ப மனு பெற்றுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெறுகிறது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்பமனு தாக்கல் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றது. ஆனால் இம்முறை இந்த கூட்டணி பிரிந்துள்ளது. இதில் பாஜக தலைமையிலாக கூட்டணியில் பாமக, தமாக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது. அதிமுக தங்கள் கூட்டணியில் எப்படியாவது தேமுதிகவை இணைக்க வேண்டும் என்ற முனைப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் இன்று மாலைக்கும் அதிமுக தேமுதிக இடையே கூட்டணி உடன்படிக்கை எட்டப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் 5 தொகுதிகள் வழங்குவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேமுதிக தரப்பில் விருதுநகரில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு பெற்றுள்ளார். ஏற்கனவே 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிமுக வெளியிட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.