Lok sabha election 2024: பாஜக - பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து; எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு? - முழு விவரம் இதோ
60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்; அதை பூர்த்தி செய்யவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் - அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கூட்டணியின் மூத்த தலைவராக இருக்கப் போகிறார் அவருக்கான முழு மரியாதையை பாஜக கொடுக்கும் - அண்ணாமலை
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் பாமக இணைந்து சந்திப்பதற்கான கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமானது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி ஒப்பந்தம் கையொப்பமான பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலில் பேசிய அன்புமணி ராமதாஸ்:
பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதி பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த முடிவுக்கு பிறகு 60 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பான சூழல் உள்ளது. மக்களுக்கு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக உள்ளது. அதைப் பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
எங்கள் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெறும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை:
தமிழ்நாட்டின் தனிப் பெரும் சக்தியாக இருக்கக்கூடிய பாட்டாளிகளால் உருவாக்கப்பட்ட பாமக மிக முக்கியமான ஒரு முடிவு எடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்தியாவினுடைய தனிப்பெரும் தலைவராக திகழ்ந்து கொண்டிருக்க கூடிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடிக்கு முன்பே அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களின் முழு அன்பைப் பெற்ற நபராக பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் திகழ்ந்து வருகின்றார். மருத்துவர் ராமதாஸ் ஒரு அற்புதமான தலைவர். புரட்சிகரமான அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது அவரது கனவு. மக்கள் இந்த கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம்.
தமிழகத்தின் அரசியல் நேற்று இரவிலிருந்து மாறி உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி எடுத்து இருக்கக்கூடிய முடிவு தமிழக அரசியலை மாற்றி இருக்கிறது.
2026 இல் நாம் அனைவரும் நினைக்கக்கூடிய அரசியல் மாற்றம் தமிழ்நாட்டில் நிகழும். நாங்களும் இரவு கோயம்புத்தூரில் ஒரே மேடையிலே நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அய்யாவோடு ஐயாவை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையோடு தோட்டத்திற்கு வந்தோம். எங்களுக்கு காலை சிற்றுண்டியோடு அன்பையும் பரிமாறினார்கள்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய மூத்த தலைவராக இருக்கப் போகிறார். அவரின் அனுபவம் ஆளுமை திறன் உழைப்பு ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் வலிமை சேர்க்கும். இப்படிப்பட்ட ஒரு தலைவர் நம் மண்ணிலிருந்து உருவாகி இருக்கின்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கு முழு மரியாதையை கொடுக்க வேண்டியது பாஜகவின் கடமை. அதனை எங்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பார்த்துக் கொள்வார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தலைவர்கள் புறப்பட்டனர்.