Local Body Election | வட்டச்செயலாளர் வண்டு முருகனை ஓவர் டேக் செய்த பெண் வேட்பாளார் - உள்ளாட்சித் தேர்தல் பரிதாபங்கள்
சீட்டு கொடுக்காததால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து வேட்பாளராக களம் இறங்கிய முனியம்மாள் நேற்று ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்
தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதி முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியாக உள்ளது. வரும் 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சிப்பணிகளை நேரடி கவனிப்பில் செய்து வருகிறார். அதிமுக மகளிரணி செயலாளராகவும், போடி நகர இணை செயலாளராகவும் இருக்கும் முனியம்மாள் என்பவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்துள்ளார்.
போடி உள்ளாட்சி தேர்தலில் 24வது வார்டு உறுப்பினராக இருந்த இவர் 22 ஆவது வார்டில் போட்டியிட தனது விருப்ப மனுவை கொடுத்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகி கடந்த 4ஆம் தேதியன்று திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த முனியம்மாள் அதே 22ஆவது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்பமனுவை தாக்கல் செய்த நிலையில் முனியம்மாள் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவையும் தக்கல் செய்தார். முனியம்மாள் திமுக சார்பில் பரப்புரையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளில் ஏதும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் முனியம்மாள் திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். நேற்றிரவு போடி நகர் பகுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக வேட்பாளர் முனியம்மாள் திமுகவின் அடிப்படை உறுப்பினராக மீண்டும் ஓபிஎஸ் முன்னிலையில் இணைந்தார்.
திமுகவில் சேர்ந்த ஒரு சில தினங்களில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், திடீரென இரவோடு இரவாக முனியம்மாள் மீண்டும் அதிமுகவில் இணைந்தது திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவர் அறிவிக்கப்பட்ட 22 வது வார்டில் மாற்று வேட்பாளராக திமுக சார்பில் கல்பனா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவில் வார்டில் போட்டியிட சீட்டு கொடுத்தும் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தது குறித்து முனியம்மாளிடம் கேட்டாலோ பதில் இல்லை என்கிறார்.
கட்சி மாறுவதால் என்னை கோழை என்றோ, பச்சோந்தி என்றோ எண்ணிவிடாதீர்கள், இருக்கின்ற இடத்திலேயே இருக்கின்ற மேடையிலேயே இங்கிருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தையிரியம் எனக்கு ஒருவருக்குதான் இருக்கிறது என்ற வடிவேலுவின் வசனம் போல் உள்ளாட்சித் தேர்தலில் கட்சித்தாவும் கூத்துகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்