Local election Results | நாளை வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - தஞ்சாவூரில் 7 இடங்களில் வாக்குகளை எண்ண முடிவு
இதில், மாநகராட்சிகளில் 62.45 சதவீதமும், நகராட்சிகளில் 64.95 சதவீதமும், பேரூராட்சிகளில் 72.18 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக 66.12 சதவீத வாக்குகள் பதிவாகின
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், ஆடுதுறை, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை, சோழபுரம், மதுக்கூர், மேலத்திருப்பூந்துருத்தி, மெலட்டூர், ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, பெருமகளூர், சுவாமிமலை, திருக்காட்டுப்பள்ளி, திருநாகேசுவரம், திருப்பனந்தாள், திருபுவனம், திருவையாறு, திருவிடைமருதூர், வல்லம், வேப்பத்தூர் ஆகிய 20 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 456 உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சிகளில் 62.45 சதவீதமும், நகராட்சிகளில் 64.95 சதவீதமும், பேரூராட்சிகளில் 72.18 சதவீதமும் என மாவட்டத்தில் சராசரியாக 66.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதில், தஞ்சை மாநகராட்சியில் 61 சதவீதமும், கும்பகோணம் மாநகராட்சியில் 65 சதவீதமும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 66 சதவீதமும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 சதவீதமும், பேரூராட்சிகளான ஆடுதுறையில் 71 சதவீதமும், அம்மாபேட்டையில் 71 சதவீதமும், அய்யம் பேட்டையில் 60 சதவீதமும், சோழபுரத்தில் 69 சதவீதமும், மதுக்கூரில் 64 சதவீதமும், மேலத்திருப்பூந்துருத்தியில் 72 சதவீதமும், மெலட்டூரில் 76 சதவீதமும், ஒரத்தநாட்டில் 74 சதவீதமும், பாபநாசத்தில் 72 சதவீதமும், பேராவூரணியில் 74 சதவீதமும், பெருமகளூரில் 83 சதவீதமும், சுவாமிமலையில் 79 சதவீதமும், திருக்காட்டுப்பள்ளியில் 77 சதவீதமும், திருநாகேஸ்வரத்தில் 73 சதவீதமும், திருப்பனந்தாளில் 74 சதிவீதமும், திருபுவனத்தில் 71 சதவீதமும், திருவையாறில் 75 சதவீதமும், திருவிடைமருதுரில் 67 சதவீதமும், வல்லத்தில் 76 சதவீதமும், வேப்பத்தூரில் 79 சதவீதமும் வாக்குககள் பதிவாகியுள்ளன.
பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்புடைய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு முதல் அனுப்பப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, பிப்ரவரி 20 ஆம் தேதி அதிகாலை சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் காவல் துறையினர் மூன்றடுக்குப் பாதுகாப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியிலும், கும்பகோணம் மாநகராட்சி வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை நகராட்சி வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அதிராம்பட்டினம் நகராட்சி வாக்குகள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலை, அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளன.
வல்லம், ஒரத்தநாடு, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியிலும், ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், வேப்பத்தூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் கும்பகோணம் லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியிலும், பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
தஞ்சாவூர் மாநகராட்சியில் பதிவான வாக்குகள் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் எண்ணப்பட உள்ள நிலையில், இதற்காக 12 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5 சுற்றுகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் 12 வார்டுகள் வீதம் நான்கு சுற்றுகளில் 48 வார்டுகளுக்கும், ஐந்தாவது சுற்றில் மீதமுள்ள 3 வார்டுகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. எனவே, நண்பகல் 12 மணியளவில் அனைத்து முடிவுகளும் தெரிய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 3 அறைகளில் 3 மேஜைகள் வீதம் மொத்தம் 9 மேஜைகள் அமைக்கப்பட்டு, மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன.