Local body election | கிழக்கில் கூட்டணி கட்சி மேற்கில் எதிர்கட்சி- கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கட்சிகளிடையே குழப்பம்
"பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்காமல் இருந்தால் அந்தந்த இடங்களுக்கு தகுந்த வகையில் நாங்கள் போட்டியிடுவோம்"
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் 3 காங்கிரஸ் வசமும், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க வசம் தலா ஒரு சட்டசபை தொகுதியும் உள்ளன. கட்சி பலத்தின் அடிப்படையில் இல்லாமல் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் உள்ளாட்சியில் நாங்கள் கேட்கும் இடங்களை கூட தி.மு.க தர மறுக்கிறது. எனவே தனியாக களம் காண்போம்" என கூறுகறார் குமரி காங்கிரஸ் நிர்வாகிகள். கன்னியாகுமரி மாவட்ட அளவிலான தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் குமுறுகிறார்கள்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல் நகராட்சி மற்றும் 28 பேரூராட்சிகள் வருகின்றன. அதில் நாகர்கோவில் மாநகராட்சியில் 13 வார்டுகளே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி மற்றும் குளச்சல் நகராட்சி சேர்மன் பதவியும் தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திலும் தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது. குமரி மேற்கு மாவட்டத்தில் பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு என மூன்று நகராட்சிகளும், 23 பேரூராட்சிகளும் உள்ளன. அதில் கொல்லங்கோடு நகராட்சியும், 11 பேரூராட்சிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. "பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கேட்ட இடங்கள் கிடைக்காமல் இருந்தால் அந்தந்த இடங்களுக்கு தகுந்த வகையில் நாங்கள் போட்டியிடுவோம்" என்கிறார் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங்.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாரிடம் பேசினோம், "தமிழ்நாட்டில் மாநகராட்சிகளில் ஒரு சீட் கூட காங்கிரசுக்கு நிர்ணயம் செய்யவில்லை. அதுபோல எந்த நகராட்சியும் நிர்ணயம் பண்ணவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறோம். கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, குளச்சல் நகராட்சி ஆகியவை தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகளில் 2 நகராட்சிகளை காங்கிரசுக்கு கேட்டோம். கொல்லங்கோடு நகராட்சி மட்டும் ஒதுக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். 23 பேரூராட்சிகளில் 12 கேட்டோம். 11 பஞ்சாயத்துகள் தருவதாக சொன்னார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. ஆனாலும், எங்களது பொது எதிரியான பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக தி.மு.க-வுடன் எவ்வளவோ இறங்கி சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமாக பார்க்கும்போது 25 சதவீதம் இடம்கூட எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் கேட்டதற்கும் தி.மு.க தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே தனியாக போட்டியிட தயாராகி வருகிறோம்" என்றார். குமரி கிழக்கு மாவட்டத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தாலும் மேற்கு மாவட்டத்தை பொருத்தவரை காங்கிரஸ் திமுக தனித்தனியே நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த நிலையே தொடர்ந்தது நினைவுகூறத்தக்கது.