உள்ளாட்சி உள்ளது உள்ளபடி: கோவை மாநகராட்சி யாருக்கு? - செந்தில் பாலாஜி VS வேலுமணி...!
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக 74 வார்டுகளிலும், அதிமுக 93 வார்டுகளிலும் போட்டியிடுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மேயர் பதவியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.
கோவை நகராட்சி கடந்த 1981 ஆம் ஆண்டில் 72 வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டில் 100 வார்டுகளாக மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 15 இலட்சத்து 38 ஆயிரத்து 411 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாநகராட்சி மேயர் பதவி இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் இதில் 45 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கான பெண்களுக்கும், பட்டியலின பெண்களுக்கு 5 வார்டுகளும் என மொத்தம் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 5 வார்டுகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேயர் தேர்தல்கள்
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 5 முறை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக 3 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. கோவை மாநகராட்சியில் 1996ம் ஆண்டு முதல் முறையாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் நேரடியாக மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2001 ஆம் ஆண்டில் அதிமுகவை சேர்ந்த தா.மலரவன் மேயரானார். 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காலனி வெங்கடாசலம் மேயராக முதல் முறையாக மறைமுக வாக்கெடுப்பு மூலம் மாமன்ற உறுப்பினர்களால் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டு நேரடி தேர்தல் அதிமுகவை சேர்ந்த செ.ம.வேலுசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயரானார். 2014ஆம் ஆண்டில் செ.ம. வேலுசாமி பதவி பறிக்கப்பட்டதால், நடந்த நேரடி தேர்தல் மூலம் கணபதி ராஜ்குமார் மேயரானார். திமுக மேயர் பதவியை கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுக்கே வழங்கியுள்ளது.
2011 தேர்தல் நிலவரம்
கோவை மாநகராட்சியில் கடந்த 2011 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 100 வார்டுகளில் 78 வார்டுகளை அதிமுக கைப்பற்றி அசத்தியது. திமுகவிற்கு 9 இடங்களே கிடைத்தன. சுயேட்சை வேட்பாளர்கள் 5 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், பாஜக 2 இடங்களையும் பிடித்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
திமுக - அதிமுக கூட்டணி நிலவரம்
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக 74 வார்டுகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 93 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டில் போட்டியிடுகிறது. பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம் காண்கிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மேயர் பதவியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றன.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மை இடங்களை பிடித்து திமுக ஆட்சியமைத்த போதும், கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணி பத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக விலகியிருப்பது, அதிமுக தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை காட்டிலும் பூத் அளவில் அதிமுக வலுவாக உள்ளது. மேலும் வலுவான வாக்கு வங்கியையும் கொண்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தேர்வு செய்த நபர்களே வேட்பாளர்களாக இருப்பதால், உட்கட்சி பூசல் எதுவும் இல்லை. அதேசமயம் எதிர்கட்சியாக இருப்பதால் அதிமுகவினர் தேர்தல் செலவு செய்ய தயங்குகின்றனர். இருப்பினும் எஸ்.பி.வேலுமணி கெளரவ பிரச்சனையாக எடுத்துக் கொண்டு இருப்பதால், கோவை மாநகராட்சியை கைப்பற்ற கூடுதல் முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த திமுக, முதல் முறையாக நேரடியாக கோவை மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றும் முனைப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறது. கோவையில் உள்ள திமுகவினரை நம்பி பயனில்லை என்பதை உணர்ந்த திமுக தலைமை, அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுப்பாளராக களமிறக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் செந்தில் பாலாஜி வியூகங்களை வகுத்து வருகிறார்.
வழக்கமாக ஆளுங்கட்சிக்கே உள்ளாட்சி தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள் என்றாலும், கோவையில் திமுக பலவீனமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேட்பாளர் தேர்வினால் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மேயர் வேட்பாளராக அறியப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் மனைவி மற்றும் மகள்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது உட்கட்சி பூசலை அதிகரித்துள்ளது.
ஒரே நேரத்தில் அதிருப்தி திமுகவினரையும், அதிமுகவினரையும் சாமாளிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை பலத்துடன் மேயர் பதவியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு குறைவு. மேயர் பதவியை கைப்பற்ற இழுபறி நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.