Local Body Election | தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் போட்டியிட 480 பேர் வேட்பு மனு தாக்கல்
காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் வேட்பு மனுதாக்கல் மந்தநிலைக்கு சென்றது. மதியத்துக்கு பிறகு மீண்டும் வேட்பு மனு தாக்கல் வேகமெடுத்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசிநாளான இன்று அதிக அளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், கூட்டணி கட்சியினருடன் சென்று அவரது தம்பியும் மேயர் வேட்பாளர் என கூறப்படும் ஜெகன் பெரியசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் வேட்பு மனுதாக்கல் மந்தநிலைக்கு சென்றது. மதியத்துக்கு பிறகு மீண்டும் வேட்பு மனு தாக்கல் வேகமெடுத்தது. பெரும்பாலான வேட்பாளர்கள் அதிக அளவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் அறை முன்பு நீண்ட வரிசையில் நின்று மனுக்களை தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் நடந்த வேட்பு மனு தாக்கலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவடைந்தது. தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே நாளில் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தி.மு.க.வினர் 25 பேரும், அ.தி.மு.க.வினர் 18 பேரும், அ.ம.மு.க.வினர் 5 பேரும், பா.ம.க. 10 பேரும், மக்கள் நீதி மய்யம் 12 பேரும், பா.ஜனதா 17 பேரும், நாம் தமிழர் கட்சி 13 பேரும், சுயேச்சைகள் 66 பேரும் என மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதே போன்று நகராட்சிகளில் 200 பேரும், பேரூராட்சிகளில் 391 பேரும் ஆக மொத்தம் 765 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
இதுவரை தூத்துக்குடி மாநகராட்சியில் 480 பேரும், கோவில்பட்டி நகராட்சியில் 276 பேரும், காயல்பட்டினம் நகராட்சியில் 126 பேரும், திருச்செந்தூர் நகராட்சியில் 140 பேரும், பேரூராட்சிகளில் ஆறுமுகநேரியில் 83 பேரும், ஆத்தூரில் 72 பேரும், ஏரலில் 69 பேரும், எட்டயபுரத்தில் 65 பேரும், கழுகுமலையில் 78 பேரும், நாசரேத்தில் 83 பேரும், சாத்தான்குளத்தில் 57 பேரும், சாயர்புரத்தில் 80 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 85 பேரும், உடன்குடியில் 106 பேரும், விளாத்திகுளத்தில் 96 பேரும், ஆழ்வார்திருநகரியில் 69 பேரும், கடம்பூரில் 33 பேரும், கயத்தாரில் 86 பேரும், புதூரில் 63 பேரும், கானத்தில் 43 பேரும், பெருங்குளத்தில் 46 பேரும், தென்திருப்பேரையில் 40 பேரும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 276 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த வேட்பு மனுக்கள் இன்று முதல் பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்கள் பரிசீலனை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெறும். இதில் வேட்பாளர் மற்றும் அவரது ஒரு முகவர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வார்டு வாரியாக வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அதன்பிறகு வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 7 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.