கோவை : கிறிஸ்துவ வாக்காளர்களை கவர சிலுவையுடன் கூடிய ஜெபமாலை கொடுத்த பாஜக வேட்பாளர்..
ஒரு வெள்ளி மூலம் தட்டு, இயேசு நாதர் உருவம் பொறித்த ஜெபமாலை, இரண்டு மெழுகுவர்த்திகள், தாமரை சின்னம் பொறித்த பேட்ஸ், தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்கும் நோட்டீஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்ற வரும் நிலையிலும், தங்கு தடையின்றி பணம், பரிசுப் பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவினர் ஆயிரம் ரூபாய் பணம், கொலுசு, ஹாட் பாக்ஸ் உள்ளிட்டவை கொடுத்து வருகின்றனர். அதிமுகவினர் 500, 1000 ரூபாய் என வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தனித்து போட்டியிடும் பாஜகவும் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் பாஜகவினர் ஜெபமாலை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. கருமத்தம்பட்டி பேரூராட்சி, அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முதல் முறையாக நகராட்சி தேர்தலை சந்திக்கும் கருமத்தம்பட்டியில் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்ற திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டில் ஆர்த்தி ரவி என்கிற பெரியசாமி போட்டியிடுகிறார். அப்பகுதியில் கிறிஸ்துவர்கள் அதிகளவில் இருப்பதால், அவர்களை கவரும் வகையில் பாஜக வேட்பாளர் பெரியசாமி சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஒரு வெள்ளி மூலம் தட்டு, இயேசு நாதர் உருவம் பொறித்த சிலுவையுடன் கூடிய ஜெபமாலை, இரண்டு மெழுகுவர்த்திகள், தாமரை சின்னம் பொறித்த பேட்ஸ், பெரியசாமி புகைப்படத்துடன் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்கும் நோட்டீஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக வேட்பாளர் கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்குகளை பெறுவதற்காக வெள்ளி மூலம் பூசப்பட்ட தட்டில் சிலுவையுடன் கூடிய ஜெபமாலை, மெழுகுவர்த்தி உள்ளிட்டவை வழங்கி வாக்குகளை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.