One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல்.. அரசியல் கட்சிகள் என்ன சொல்லப்போகிறது? உயர்மட்ட குழு எடுத்த முடிவு
நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்துகளை கேட்க சட்ட ஆணையத்திற்கு உயர் மட்ட குழு அமைப்பு விடுத்திருந்தது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல்:
குழுவின் முதல் கூட்டம், கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் சட்ட ஆணையத்தின் கருத்துகளை கேட்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக 22ஆவது சட்ட ஆணையம் அறிக்கை சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சட்ட ஆணையத்தின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களுடன் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் உறுப்பினர்களும், இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்துகளை கேட்க சட்ட ஆணையத்திற்கு உயர் மட்ட குழு அமைப்பு விடுத்திருந்தது. அதேபோல, அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்கவும் உயர் மட்ட குழு அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த உயர் மட்ட குழு:
இருவருக்கும் ஏற்ற ஒரு தேதியில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தவும் அதில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கட்சிகள் தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக அனுப்பு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் (எல்சிஐ) ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்த வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதில் அடங்கியுள்ள அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டன. தற்போதுள்ள அரசியலமைப்பின்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று ஆணையம் அறிக்கை சமர்பித்தது.
கடந்த 1999-ஆம் ஆண்டு, நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையிலான இந்திய சட்ட ஆணையம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி, அரசியலமைப்பு அமலுக்கு வந்த பிறகு, 1951-52 காலக்கட்டத்தில் மக்களவைக்கும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்த நடைமுறை, மூன்று மக்களவை தேர்தலுக்கு தொடர்ந்த நிலையில், கடந்த 1967ஆம் ஆண்டு, தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் நடைமுறை தடைப்பட்டது. அரசியலமைப்பு தோல்வி அடைந்ததாகக் கூறி, கடந்த 1959ஆம் ஆண்டு, அப்போதைய கேரள அரசு கலைக்கப்பட்டதன் மூலம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை முடிவுக்கு வந்தது.