L. Murugan: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு..!
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு மீண்டும் எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5 மாநிலங்களவை உறுப்பினர்கள்:
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட ஐந்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் 4 வேட்பாளர்களும், காங்கிரஸிலிருந்து ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
BJP releases another list of candidates for the Rajya Sabha Biennial elections.
— ANI (@ANI) February 14, 2024
Union Minister L Murugan from Madhya Pradesh
Union Minister Ashwini Vaishnaw from Odisha pic.twitter.com/gE7m8geLCu
பிப்ரவரி 20-ம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் வரை காலியாக இருந்த அதே எண்ணிக்கையிலான இடங்களுக்கு ஐந்து வேட்புமனுக்கள் மட்டுமே பெறப்பட்டதால் அவர்கள் போட்டியின்றி அறிவிக்கப்பட்டனர்.
ஐந்து வேட்பாளர்கள்:
- மத்திய அமைச்சர் எல் முருகன் (பாஜக)
- மத்தியப் பிரதேச பாஜகவின் மகளிர் பிரிவுத் தலைவர் மாயா நரோலியா (பாஜக)
- வால்மீகி தாம் ஆசிரம தலைவர் உமேஷ் நாத் மகாராஜ் (பாஜக)
- கிசான் மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவர் பன்ஷிலால் குர்ஜார் (பாஜக)
- எம்பி காங்கிரஸ் பிரிவு பொருளாளர் அசோக் சிங் (காங்கிரஸ்)
மாநிலங்களவை தேர்தல்:
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல், பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. 15 மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகின்றனர். இந்த இடங்களுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஆகியோர் சபையில் இருந்து ஓய்வு பெறுகின்றனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் (கர்நாடகா), தர்மேந்திர பிரதான் (மத்திய பிரதேசம்), வி முரளீதரன் (மகாராஷ்டிரா) மற்றும் பூபேந்தர் யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோரும் ஓய்வு பெறுகிறார்கள். வரும் மக்களவை தேர்தலில் இந்த அமைச்சர்கள் அனைவரும் கட்சி சார்பில் களமிறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்மோகன் சிங் (காங்கிரஸ்), அனில் பலுனி (பாஜக), சந்துனு சென் (ஏஐடிசி), அமர் பட்நாயக் (பிஜேடி), காந்தா கர்தம் (பாஜக), அனில் தேசாய் (சிவசேனா-யுபிடி), வந்தனா சவான் (என்சிபி-ஷரத் பவார்), பிரகாஷ் ஜவடேகர் (பாஜக), அமீ யாஜ்னிக் (காங்கிரஸ்), சரோஜ் பாண்டே (பாஜக), சுஷில் குமார் மோடி (பாஜக) மற்றும் பஷிஸ்தா நரேன் சிங் (ஜேடியு) ஆகியோர் ஓய்வு பெறவுள்ளனர்.