(Source: ECI/ABP News/ABP Majha)
ஒரு கோடி ரூபாய் பரிசு.. கரூர் சுயேச்சை வேட்பாளர் வெளியிட்ட அறிவிப்பு
கரூர் மாநகராட்சி இருபத்தி ஆறாவது வார்டு பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என அறிவிப்பு
கரூர் மாநகராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையான முறையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசுடன் பாராட்டு விழா நடத்துவதாக சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜேஷ் கண்ணன் போஸ்டர் வெளியிட்டதால் பரபரப்பு - சமூக வலைத்தளங்களில் போஸ்டர் வைரலாகி வருகிறது
கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில் 26 வது வார்டு சுயேட்சை வேட்பாளராக ராஜேஷ் கண்ணன் என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் உயிருடன் எலிப்பொறியில் அடைக்கப்பட்ட எலியை எடுத்து சென்று பிரச்சாரக் களத்தை சூடு ஏற்றினார். பொதுமக்களிடம் 100 சதவீதம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், தான் வெற்றிபெற்றால் வார்டு முழுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும், பெண்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் எனவும், சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுப்படுத்தப்படும் எனவும், குடியிருப்பு பகுதியில் வாட்ச்மேனை நியமித்து பிரச்சினைகள் வரும் முன்னர் காத்திடுவேன் எனவும், உறுதிமொழி அடங்கிய பிரச்சார துண்டறிக்கைகளை வழங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
26வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 1596 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே சமயம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ராஜேஷ்கண்ணன் 335 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையான முறையில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு வருகின்ற 7ம் தேதி பாராட்டு விழாவுடன், 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற 5ம் தேதியுடன் விண்ணப்பம் நிறைவு பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.