Karnataka Opinion Poll: கர்நாடகாவின் முக்கிய பகுதியான பெங்களூரூ நிலவரம் என்ன? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!
பெங்களூரு பகுதியில் காங்கிரஸ் கூட்டணி இம்முறை 41.2 சதவிகித வாக்குகளையும், பாஜக 37 சதவிகித வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 14.5 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Karnataka Opinion Poll: கர்நாடகாவின் முக்கிய பகுதியான பெங்களூரூ நிலவரம் என்ன? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..! Karnataka Opinion Poll What is the state of Bengaluru the main part of Karnataka ABB C Voter Survey Karnataka Opinion Poll: கர்நாடகாவின் முக்கிய பகுதியான பெங்களூரூ நிலவரம் என்ன? ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/07/6c13aec2e8d36b28a638420d04435d961683429215268109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடக சட்டமன்ற தேர்தல் களைகட்டி வரும் நிலையில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன, அதன்படி பெங்களூரு பகுதியில் காங்கிரஸ் கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக தேர்தல்
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்தாண்டு நடைபெறும் பல மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்கள் கருதப்படுகிறது. அதில் மிக முக்கியமானது கர்நாடகா சட்டமன்ற தேர்தல். ஏனெனில் தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால் இந்த தேர்தல் பா.ஜ.க.வை பொறுத்தவரை மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. எனவே தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்து வரும் நிலையில் நாளையுடன் பிரச்சாரங்கள் ஓய்கின்றன. தாமதிக்காமல் 13 ஆம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
பரபரப்பான தேர்தல் களம்
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களைகட்டியது. முக்கிய பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி என எல்லோரும் குவிய, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுமைக்குமான அரசியல் விவகாரங்கள் தென்னிந்தியாவில் பாதிக்கும் ஒரே மாநிலமாக கர்நாடக இருப்பதால் இரு கட்சிகளும் கவனமாகவே காய்களை நகர்த்தி வந்தன. ஆனால் ராகுலின் நடைபயணம், எம்பி பதவி பறிப்பு போன்ற விஷயங்களும், பாஜக வின் கண்கவர் தேர்தல் அறிக்கைகளும் கள சூழலை மாற்றிக்கொண்டே இருந்தன. யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கேள்வி ஒட்டுமொத்த இந்தியர்கள் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது.
ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில் சமூக பொருளாதாரம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சி வோட்டர் நிறுவனமும், நமது ஏபிபி செய்தி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துகணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒரு வாரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 6420 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்த தேர்தலில் 40.2 சதவிகித வாக்குகளை பெற்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் இதில் பகுதிவாரியாக யார் முன்னிலை பெறுகிறார்கள் என்பதுதான் மிகவும் அவசியமாகிறது.
பெங்களூரு நிலவரம் என்ன?
பெங்களூரை பொறுத்தவரை, கடந்த முறை கூட 40 சதவிகித வாக்குகளைப் பெற்று 17 இடங்களை அந்த பகுதியில் கைப்பற்றி இருந்தது காங்கிரஸ். ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பில், பெங்களூரு பகுதியில் காங்கிரஸ் கூட்டணி இம்முறை 41.2 சதவிகித வாக்குகளை பெறும் என்றும், பாஜக 37 சதவிகித வாக்குகளுடன் 2வது இடத்தையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 14.5 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இம்முறை காங்கிரஸ் கூட்டணி 1.2 சதவிகிதம் அதிகமாகவும், பாஜக 2 சதவிகிதம் குறைவாகவும் பெரும் எனக் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதாவது காங்கிரஸ் கூட்டணி 14 முதல் 18 சீட்டுகளும்,பாஜக 12 முதல் 16 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 1 முதல் 4 சீட்டுகள் வரை பெறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 32 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)