WB Exit Poll Results 2024: மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மாஸ் காட்டிய மோடி! கருத்துக்கணிப்பு நிலவரம்
West Bengal Exit Poll Results 2024: ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள், மம்தாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மேற்குவங்கம். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்த மேற்குவங்கத்தில் சமீப காலமாக பாஜக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருந்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றதை தொடர்ந்து, தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, மேற்குவங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 23 முதல் 27 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி 1 முதல் 3 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 13 முதல் 17 இடங்களில் ஜெயிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. தேசிய அளவில் 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ் காட்டிய மோடி: பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, கடந்த முறையைவிட இந்த முறை அக்கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கடும் போட்டி அளித்த இந்தியா கூட்டணி 152 முதல் 182 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 45.3 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் 4 முதல் 6 இடங்களையும் குஜராத்தில் 25 முதல் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் 4 முதல் 6 இடங்களையும் கர்நாடாகவில் 23 முதல் 25 இடங்களையும் பாஜக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.