Erode Lok Sabha Election Results 2024: ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி!
Erode Lok Sabha Election Results 2024: ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவின் பிரகாஷ் 4,64,878 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
Erode Lok Sabha Election Results 2024: நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election 2024) ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதிவரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதாவது, ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை (Election Results 2024) காலை 8 மணி முதல் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும்.
தமிழ்நாட்டில், ஆட்சியில் உள்ள திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி, எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணி, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான NDA கூட்டணி, மற்றும் நாம் தமிழர் கட்சி என மொத்தம் நான்கு முனைப் போட்டியாக தேர்தல் களம் இருந்தது. இந்நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்து இங்கு தெளிவாகக் காணலாம்.
ஈரோடு மக்களவைத் தொகுதி
ஜவுளித் துறை, விசைத்தறி, மஞ்சள் விவசாயம் ஆகியவற்றுக்கு பெயர் போன ஈரோடு நகரம் திராவிட இயக்கத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த மண் எனும் பெருமையைக் கொண்டது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பினை அடுத்து, ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
ஈரோடு மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை அதனுள், குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி) மற்றும் காங்கேயம் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் மூன்று தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியில் அதிமுகவும், ஒரு தொகுதியில் பாஜகவும் எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளது. மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுகவைச் சேர்ந்த மறைந்த கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனடிப்படையில் பார்க்கையில், திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக இருந்தாலும், களத்தில் உள்ள வேட்பாளர்களும் மக்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்த அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.
வாக்காளர்கள் விவரம்
தற்போதைய நிலவரப்படி ஆண் வாக்காளர்கள் - 7,44,927 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,83,667 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 185 பேர்
என மொத்த வாக்காளர்கள் - 15,38,778 பேர் உள்ளனர்.
இவர்களில் தற்போது, 10,86,287 பேர் அதாவது 70.5 விழுக்காடு நபர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.
வெற்றி யாருக்கு?
ஈரோடு மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை 19 சுயேட்சை வேட்பாளர்களுடன் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். களமிறங்கிய வேட்பாளர்களில் தமிழ்நாட்டில் இருந்து இந்தத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு காண்பித்த அதிமுகவின் வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்டவராக உள்ளார். அதேபோல் திமுக தரப்பில் பிரகாஷ் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்மேகம் என்பவரும், பாஜக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயகுமார் என்பவரும் களமிறங்கினர்.
ஈரோட்டில் இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, கணிசமான வாக்குகளைக் கொண்ட பாஜக இடையே மும்முனைப்போட்டி நிலவிய நிலையில், வெற்றி பெற்று இந்தத் தொகுதியைக் கைப்பற்றப் போவது யார் எனப் பார்க்கலாம்.