Edappadi Palanisamy: எட்டப்பர்களுக்கு இந்த தேர்தல் பாடமாக அமைய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ( Erode East By Election ) தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த இயக்கத்தை சிலர் எதிரிகளோடு இணைந்து எட்டப்பர் வேலை செய்து அழிக்க வேண்டும் என நமக்கு விரோதமாக செயல்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு இந்த தேர்தல் பாடமாக அமைய வேண்டும் என்றார்.
நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேளுங்கள்
”இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என இந்தியாவே உற்று நோக்குகிறது. நமது உழைப்பு தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக இருந்து சிந்தாமல் சிதறாமல் சரித்திர வெற்றியை பெற வேண்டும். கொங்கு மண்டலத்தில் அதிமுகவை தோற்கடித்ததாக வரலாறு கிடையாது. சரியான முறையில் உழைத்தால் வெற்றி நிச்சயம். அதிமுக ஆட்சியில் தான் நிறைய திட்டங்கள் செய்து இருக்கிறோம் .எனவே நாம் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். அவர்கள்(திமுக கூட்டணிக் கட்சியினர்) கூனி குறுகி வாக்கு கேட்பார்கள்” என்றார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போது நிறைவேற்றி திறந்து வைக்கின்றனர் என தெரிவித்த அவர் இந்த தொகுதியில் அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என பட்டியலிட்டார். ”தேர்தலில் ஒவ்வொருவரும் வேட்பாளர் என எண்ணி பணியாற்றி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதிமுகவின் இரும்பெரும் தலைவர்களுக்கான எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் பள்ளியில் படித்த மாணவர்கள் என்று காட்ட, அவர்கள் கற்றுக்கொடுத்த அரசியலை பயன்படுத்தி இத்தேர்தலில் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும்” என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.
ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு வேட்பாளரை அறிவிக்கும் என கூறியுள்ளார்.
ஆட்சிமன்ற குழு:
மேலும் அவர் கூறியதாவது, எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் கருத்துக்கள் அனைத்தையும் கேட்டு, விருப்பமனு பெற்று அதனடிப்படையில் யார் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள், தொகுதியில் பரிச்சயமானவர்கள், கட்சிக்கும், எம்.ஜி.ஆருக்கும். ஜெயலலிதாவிற்கும் விசுவாசமானவர்களா? என்று ஆய்வு செய்து ஆட்சிமன்ற குழு முடிவு செய்யும். ஆட்சிமன்ற குழு அறிவிக்கும்.
தி.மு.க. மாதிரி சர்வாதிகார கட்சி கிடையாது. இது ஜமீன்தார் கட்சியோ, அரச கட்சியோ கிடையாது. 31-ந் தேதி வரை நேரம் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை நட்பு உணர்வு, தோழமை உணர்வு, கூட்டணி தர்மத்தை கடைபிடிப்போம். அந்த அடிப்படையில் அனைவரையும் பார்த்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
கையெழுத்திடும் அதிகாரம்:
உதாரணத்திற்கு தேசிய கட்சிகள் மாநில அளவில் முடிவு செய்ய முடியாது. தேசிய அளவில் கேட்டுத்தான் முடிவு செய்வார்கள். மாநில கட்சிகள் உடனே கூறிவிடுவார்கள். நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. நீதிபதிகள் தேர்வு தெளிவாக உள்ளது. கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் உள்ளது. ஏ மற்றும் பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது எனவு அவர் கூறினார்.