Delhi Election Results: டெல்லியில் கம்பேக் கொடுத்த பாஜக? 5 ஆண்டுகளில் 3 முதலமைச்சர்கள் - 1998ல் ஆட்சியை பறித்த வெங்காயம்
Delhi Election Results Recap: டெல்லியில் கடந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Delhi Election Results Recap: டெல்லி சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரம் வெளியாகிறது. இதில் பாஜக தொடர்ந்து பெருன்மைக்கு தேவையானதை காட்டிலும், கூடுதலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தேர்தல் பரப்புரையின் போது, கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுக்கு வாய்ப்பளித்த டெல்லி மக்கள், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட இந்த முறை பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். அவரது கோரிக்கை பலிக்கும்படி தான், தற்போதைய சூழலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், கடந்த முறை பாஜக டெல்லியில் ஆட்சிக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது குறித்து இங்கே அறியலாம்.
கம்பேக் கொடுத்த பாஜக:
1952ம் ஆண்டிலேயே டெல்லியில் தேர்தல் நடத்தப்பட்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரம்ம பிரகாஷ் முதலமைச்சராக தேர்வானார். தொடர்ந்து, 1956ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலம் முடிவுற்றதுமே, சுமார் தலைநகர் டெல்லியின் முதலமைச்சர் பதவ் சுமார் 37 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு 1993ல் அநடைபெற்ற முதல் தேர்தலிலேயே பாஜக அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 49 தொகுதிகளில் பாஜகவினர் வெற்றி பெற்றனர். அந்த ஆட்சி 5 ஆண்டுகளை பூர்த்தி செய்தாலும், அதன் பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது தான் பாஜக ஆட்சி கட்டிலை நெருங்கியுள்ளது.
5 ஆண்டுகளில் 3 முதலமைச்சர்கள்:
மதன் லால் குரானா - 1993ம் ஆண்டு பாஜக சார்பில் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். கட்சியின் பிரபலமான தலைவராக இருந்தபோதிலும், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 1996ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி வழங்கப்படாததால், பாஜகவிற்கு உட்கட்சி மோதல் வெடித்தது.
சாஹிப் சிங் வர்மா - பொருளாதார ஸ்திரமின்மை, குறிப்பாக 1998 இல் வெங்காய விலை கிலோவுக்கு ரூ.40-50 ஆக உயர்ந்ததால், பொதுமக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. வாக்காளர்களை பாஜகவுக்கு எதிராகத் திருப்பியது. இந்த நெருக்கடி பாஜகவின் பிம்பத்தை முடக்கியது, பணவீக்கம் மற்றும் நிர்வாக தோல்விக்கு ஒத்ததாக அமைந்தது. இதனால், 1998ல் பதவியை ராஜினாமா செய்தார்.
சுஸ்மா சுவராஜ்: கடைசி முயற்சியாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், சுஸ்மா சுவராஜ் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பாஜகவால் நியமிக்கப்பட்டார். இருப்பினும் பாஜகவிற்கு நற்பெயரை ஏற்படுத்த அவருக்கு வழங்கப்பட்ட, 52 நாட்கள் எனும் குறுகிய கால அவகாசம் போதாதால் காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஷீலா தீட்ஷித் தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் கருப்பு பக்கங்கள்:
டெல்லியில் பாஜகவின் அந்த 5 ஆண்டுகால ஆட்சி என்பது அரசின் நிலையற்ற தன்மை, உட்கட்சி மோதல்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தவறாக கையாளாதது போன்றவற்றின் மூலமே அடையாளப்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில், மத்தியில் இருந்த வாஜ்பாய் தலைமயிலான பாஜக அரசும், வெங்காய விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை துரித கதியில் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது பாஜகவின் கருப்பு பக்கங்களாக பார்க்கப்படுகிறது. அந்த நிலை இந்த முறை மாறுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

