Congress Election Manifesto: 5 தலைப்புகளில் 25 தேர்தல் வாக்குறுதிகள்: வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.. பாஜகவுக்கு நெருக்கடி!
Congress Lok Sabha Election Manifesto 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது இளைஞர்கள், பெண்களை, விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயாரித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மறுக்கப்பட்ட அம்சங்களை நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். வேலை மக்கள் நலன் உள்ளிட்டவைகளை அடக்கி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை பாஜக கைப்பற்றி சிதைத்துவிட்டது. நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளோம். வேலைவாய்ப்பின்மை என்பது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
LIVE: Congress party Manifesto launch for 2024 Lok Sabha elections | Haath Badlega Halaat https://t.co/QqE0551ssj
— Congress (@INCIndia) April 5, 2024
இந்தியாவில் மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் பரப்புரைகளும் களைகட்டியுள்ளது. நகரம் முதல் கிராமம் வரை வித்தியாசமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய, மாநில தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியாவது பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்று ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து “இந்தியா” என்ற கூட்டணியை அமைத்துள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றுமை நடைபயணத்தின்போது ராகுல் காந்தியிடம் மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. ட்
தேசிய கல்வி கொள்கை திருத்தி அமைப்பது, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவினால் தானே பதவியிழக்கும் சட்டம், நீட் தேர்வு நடத்துவது மாநிலங்களின் உரிமை என பல முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு, 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.