அய்யம்ப்பேட்டை பேரூராட்சியில் 4 வார்டுகளில் போட்டியிடாமல் ஜகா வாங்கிய அதிமுக - காரணம் தெரியுமா?
மோத்தி முகம்மது இப்ராஹீம்,அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவராக வேண்டும் என்றும், கூட்டணியிலுள்ள அதிமுகவில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதற்காக தனு மனைவி, தாயை சுயேட்சையாக போட்டியிட வைத்துள்ளார்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அய்யம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அய்யம்பேட்டை பேரூராட்சியில் அதிமுக நிர்வாகி தனது மனைவி, தாய் மற்றும் வட்ட செயலாளர் தனது மனைவியை சுயேட்சையாக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
அய்யம்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டில் அதிமுக மாவட்ட மாணவரணி பொருளாளர் மோத்தி முகம்மது இப்ராஹீம் என்பவர் தனது தாயார் அஜலூனிசா என்பவரை சுயேட்சை குடிநீர் குழாய் சின்னத்திலும், இவரது மனைவி நசிமாபர்வீன் என்பவரை 15 ஆவது வார்டில் சுயேட்சையாக குடிநீர் குழாய் சின்னத்திலும் களம் இறக்கி உள்ளார்.
இதே போல் 15 வது வார்டு அதிமுக வட்ட செயலாளர் ரியாஸ் என்பவர் தனது மனைவி அணீஸ் பாத்திமாவை 6 வது வார்டில், குடிநீர் குழாய் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். அய்யம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 5, 6, 15, 7 ஆகிய வார்டுகளில் அதிமுக போட்டியிடவில்லை
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கூறுகையி்ல், பேரூராட்சியில் தேர்தல் பொறுப்பாளராக மாவட்ட மாணவரணி பொருளாளர் மோத்தி முகம்மது இப்ராஹீம் மற்றும் ஐடி பிரிவு சதீஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பதால், தான் வெற்றி பெற முடியாது என இருந்து வந்த நிலையில், பாஜக கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது. இதனை அடுத்து, தேர்தல் பொறுப்பாளர்கள், வார்டில் கட்சிக்காக உழைத்தவர்களை கலந்தாலோசிக்காமல், போட்டியிட விருப்பம் உள்ளார்களா என கேட்காமல், தனது மனைவி, தாயை சுயேட்சையாக போட்டியிட வைத்துள்ளனர்.
மோத்தி முகம்மது இப்ராஹீம், தான் அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவராக வேண்டும் என்றும், அதற்கு மத்தியில் கூட்டணியிலுள்ள அதிமுகவில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதற்காக தனு மனைவி, தாயை சுயேட்சையாக போட்டியிட வைத்துள்ளார். இதே போல் 7 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் பக்கீர்மைதீன், திமுக கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார். இது குறித்து ஒன்றிய செயலாளர் மற்றும் பேரூர் செயலாளரிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இது குறித்து பேரூர் செயலாளர் முருகனிடம் கேட்ட போது, நான் கோயிலில் உள்ளேன். சிறிது நேரம் கழித்து பேசுகிறேன் என தொடர்பை துண்டித்து விட்டார். பாபநாசம் தொகுதியில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, மூன்று முறை போட்டியிட்டு, வெற்றி பெற்றார். துரைக்கண்ணு போட்டியிட்டால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என, அழைத்து சீட் வழங்கினார். ஆனால் தற்போது திமுகவினரோடு கைகோர்த்து, அதிமுகவை தற்போதுள்ள நிர்வாகிகள் அழித்து விடுவார்கள். இதனை மாவட்ட செயலாளர் மட்டுமின்றி கட்சியின் ஒருங்கிணைபாளர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.