Local body election | பொய் சொல்வதில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் - நெல்லையில் ஈபிஎஸ் பேச்சு
” பொங்கல் தொகுப்பில் விஞ்ஞான ஊழல், நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பில் பொய் வாக்குறுதி என பித்தலாட்டம் செய்யும் அரசாக திமுக அரசு உள்ளது “
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சி, நகராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பரப்புரை மற்றும் ஆலோசனை கூட்டம் நெல்லை கே.டி.சி நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான தகவலை சொல்லி திமுக ஆட்சுக்கு வந்துள்ளது, திமுகவின் எட்டுமாத ஆட்சியில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை, சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்டது.
ஆனால் அதில் 200 திட்டம் செயல்படுத்தல்பட்டு உள்ளதாக பொய் சொல்கின்றனர். இப்படி பொய் சொல்லும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று விமர்சித்தார். மேலும் மாதம் 1000 ரூபாய் தருவோம் என்று சொன்னார்கள், ஆனால் அது செயல்படுத்தவில்லை, செயல்படுத்த முடியாத பொய்யான அறிப்புகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவிற்கு இந்த நகர்புற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், வாக்குகளை பெற கவர்ச்சியான அறிவிப்புகளை அறிவித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது,
நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பில் 35 லட்சம் பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். பொய்யான வாக்குறுதியை நம்பி நகைகளை அடகு வைத்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் மூலம் அபராத வட்டி வசூல் செய்யும் பித்தலாட்ட அரசு இது என்று விமர்சனம் செய்தார். அதே போல புயல், வறட்சி போன்றவற்றில் நிவாரணம் வழங்கிய முதன்மையான அரசு அதிமுக தான்,
தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையம் முறையாக செயல்படவில்லை, அதனால் தமிழகம் முழுவதும் 3 லட்சம் நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்பட்டது, கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசாக 2500 கொடுத்த போது, 5000 கொடுக்க வேண்டும் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது ஏழை மக்களுக்கு எவ்வளவு கொடுத்துள்ளார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகுப்பில் மட்டும் 500 கோடி திமுக அரசு ஊழல் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார். மிளகாய் பொடி பாக்கெட்டில் பொருள் இல்லாமல் காற்று அடைத்து கொடுத்த கட்சி, விஞ்ஞான ஊழல் செய்த அரசு திமுக அரசு, ஊழலுக்காக பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, மக்கள் நலனுக்காக கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
நீட் விவகாரம் காங்கிரஸ், திமுக கூட்டணி அரசில் தான் கொண்டு வரப்பட்டது, அதை தடுத்துக் கொண்டிருந்தது அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் திமுகவிடம் இருப்பதாக உதயநிதி பேசினார். ஆனால் அதே மறைக்க தற்போது அதிமுக மீது குற்றம் சாட்டுகிறது, நீட் விலக்கு பெறுவதே அதிமுகவின் நிலைபாடு என்றும் கூறினார். கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்காக மருத்துவ கனவு நிறைவேற 7.5% இட ஒதுக்கீடு கொண்டுவந்தது அதிமுக தான். இந்த 7.5% இட ஒதுக்கீடு காரணமாக 554 பேர் இன்று மருத்துவராகின்றனர், மருத்துவ கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு கல்வித் தொகையை ஏற்றுக் கொண்டது அதிமுக அரசு தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் திருநெல்வேலி மாநகராட்சியில் அதிமுக மேயர் வந்தால் தான் 900 கோடி மதிப்பிலான திட்டம் விரைந்து முடிக்கப்படும், மொத்தமாக திமுக அரசிற்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமையவேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.