ABP Cvoter Exit Poll 2024: கம்யூனிஸ்ட் இடத்தை கைப்பற்றுமா பாஜக? - கேரளாவில் கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
ABP Cvoter Exit Poll 2024 Kerala: கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் யுபிஏ கூட்டணி 17 முதல் 19 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த முறை எந்த இடத்தையும் வெல்லாத என்டிஏ கூட்டணி, இம்முறை 1 முதல் 3 தொகுதிகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (ஜூன் 1) முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. நாட்டின் புகழ்பெற்ற செய்தி நிறுவனமான ABP – C Voter இணைந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தின.
அதில் கேரள நிலவரம் குறித்துக் கூறப்பட்டு உள்ளதாவது:
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் யுபிஏ கூட்டணி 17 முதல் 19 தொகுதிகளை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல என்டிஏ கூட்டணி 1 முதல் 3 இடங்களைப் பிடிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காது என்றே கருத்துக் கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளன. (இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கேரளாவில் தனித்துக் களம் காண்பதால் யுபிஏ கூட்டணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)
வாக்கு சதவீதம் எவ்வளவு?
இடதுசாரி முன்னணி 33.3% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுபிஏ கூட்டணி, 41.9 சதவீத வாக்குகளையும் என்டிஏ கூட்டணி 22.6 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய ABP – C Voter கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் களம் காண்கிறார். கடந்த முறை உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் மட்டுமே ராகுல் காந்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 37 முதல் 39 தொகுதிகளையும் இந்தியா கூட்டணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி 0 முதல் 1 இடத்தைப் பெறும் என்று கருத்துக்கணிப்பில் மக்கள் தெரிவித்து உள்ளனர். அதிமுக 0 முதல் 1 இடத்தைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி 46.3 சதவீத வாக்குகளையும் என்டிஏ கூட்டணி 18.9 சதவீத வாக்குகளையும் பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக 21% இடங்களையும் பிற கட்சிகள் 13.8 சதவீத இடங்களையும் பெறும் என்று ABP – C Voter கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.