Lok Sabha Election 2024: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 264 பதற்றமான வாக்குச்சாவடிகள்!
பொதுமக்கள் 9489939699 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாகவும், e-Vigil என்ற இணைய வழி App மூலமும் புகார்கள் தெரிவிக்கலாம்.
![Lok Sabha Election 2024: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 264 பதற்றமான வாக்குச்சாவடிகள்! 264 polling booths have been detected in Salem Parliamentary Constituency. Lok Sabha Election 2024: சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 264 பதற்றமான வாக்குச்சாவடிகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/17/ebf5dab19993dc155569c25697f5928e1710647307433113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்திற்கான நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையமானது அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு நலத்திட்ட விளம்பர பதாகைகள் மற்றும் கல்வெட்டுகள் முதல்வர் படம் ஆகியவைகள் அகற்றப்பட்டன. அரசின் சாதனை விளக்க புகைப்படம் அடங்கிய பேனர்களும் அகற்றப்பட்டன. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவர்கள் சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மறைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டம்...
இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி தலைமையில் அனைத்து அலுவலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும், சோதனை சாவடி அமைப்பது, அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்யாமல் தடுப்பதற்கான தனிப்படைகள் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கான விதிமுறைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
வாக்காளர்கள் விவரம்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 14,56,299 ஆண் வாக்காளர்கள், 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாக்காளர்களில் 85 வயதிற்கு மேல் 25,577 (வயது முதிர்ந்த) வாக்காளர்களும், 25,160 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 8,23,336 ஆண் வாக்காளர்கள், 8,25,354 பெண் வாக்காளர்கள் மற்றும் 221 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஆக மொத்தம் 16,48,911 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்குச்சாவடிகள்.
சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 1,249 வாக்குச்சாவடி மையங்களில் 3,257 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 264 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், தேர்தல் விதியினை மீறி நடப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் 33 பறக்கும் படைகளும், 33 நிலை கண்காணிப்பு குழுக்களும், 11 வீடியோ பார்வை குழுக்களும், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்களும், 3 ஊடக சான்றிதழ் காண்காணிப்பு குழுக்களும், 11 கணக்கு சரிபார்ப்பு குழுக்களும் மற்றும் 1 தினசரி அறிக்கை சமர்ப்பிக்கும் குழு ஆகிய 7 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சேலம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் எண்.
மேலும், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு. பொதுமக்கள் தங்கள் புகார்களை 18004257020, 0427-2450046, 0427-2450031, 0427-2450032, 0427-2450035 ஆகிய எண்களுக்கும், 9489939699 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் தெரிவிக்கலாம். மேலும், குடிமக்கள் e-Vigil என்ற இணைய வழி App மூலமும் புகார்கள் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)