Temporary Teachers: இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்; தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஏன்? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
![Temporary Teachers: இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்; தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஏன்? - மக்கள் நீதி மய்யம் கேள்வி Why appoint temporary teachers in government schools?- Makkal Needhi maiam Question Temporary Teachers: இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள்; தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஏன்? - மக்கள் நீதி மய்யம் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/07/5d92d30636db6519d59dbda20858a7fa1665138901825332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5,000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழகத்தில் 2,831 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. இந்நிலையில், இவ்வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்குக் காத்திருக்கும்போது, தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன்?
குறைந்த சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும். எனவே, தற்காலிக, தொகுப்பூதிய முறைகளைக் கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
நிரந்தர ஆசிரியர் நியமனமானது, தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் நடக்க வாய்ப்புள்ள முறைகேடுகளையும், அரசியல் தலையீடுகளையும் தடுத்து நிறுத்தும். மாணவர்களுக்கு தரமான கல்வியையும், ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உறுதிப்படுத்தும். இதில் தமிழக முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடி கவனம் செலுத்தி, ஆசிரியர், மாணவர் நலன்களைப் பாதுகாப்பது அவசியம்''.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381 பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை.
இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியானது. தொடக்கக் கல்வித்துறையில் ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தற்போது ஆசிரியர்களை 1ஆம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்கப் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசு மீண்டும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. தொடக்கக் கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்துகொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)