பொதுத்தேர்வில் 1.18 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்?- வெளியான அதிர்ச்சித் தகவல்!
10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத 1.18 லட்சம் மாணவர்கள் வரவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத 1.18 லட்சம் மாணவர்கள் வரவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பள்ளிகள் செயல்படாமல், மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தொற்று குறைந்த பிறகு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகளை திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
பாடத்திட்டம் குறைப்பு
மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 50 சதவீதமும், 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பாடத்திட்டத்தில் 35 சதவீத பாடப்பகுதிகளும் குறைக்கப்பட்டது.
குறைக்கப்பட்டபிறகு 1-ஆம் வகுப்புக்கு 50 சதவிகிதமும், 2-ஆம் வகுப்புக்கு 50 சதவிகிதமும், 3-ஆம் வகுப்புக்கு 51 சதவிகிதமும், 4-ஆம் வகுப்புக்கு 51 சதவிகிதமும், 5-ஆம் வகுப்புக்கு 52 சதவிகிதமும், 6-ஆம் வகுப்புக்கு 53 சதவிகிதமும், 7-ஆம் வகுப்புக்கு 54 சதவிகிதமும், 8-ஆம் வகுப்புக்கு 54 சதவிகிதமும், 9-ஆம் வகுப்புக்கு 62 சதவிகிதமும், 10-ஆம் வகுப்புக்கு 61 சதவிகிதமும், 11-ஆம் வகுப்புக்கு 60-65 சதவிகிதமும், 12-ஆம் வகுப்புக்கு 60-65 சதவிகிதமும் பாடத்திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நடப்புக் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை எழுத 26.77 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் தேர்வை எழுத, 1.18 லட்சம் மாணவர்கள் வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமூக, பொருளாதாரத் தாக்கம்
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மக்கள் மத்தியில் சமூக, பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குழந்தைத் திருமணங்களை அதிகரித்துள்ளது. மேலும் பல மாணவர்கள் பாலிடெக்னிக், ஐடிஐ படிப்புகளில் சேர்ந்துவிட்டனர். இவையே 1,18,231 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வராததற்குக் காரணம்.
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்