Thirukkural: எப்படிக் கேட்டாலும் சொல்லுவோம்... திருக்குறளில் சாதனை படைக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்..
கொரோனா அரசுப் பள்ளி மாணவிகளின் சுமார் 2 ஆண்டுகாலப் படிப்பைக் காவு வாங்கிய நிலையில், 1330 குறள்களையும் படித்து முடித்துள்ளனர்.
விழுப்புரத்தில் 8ஆம் வகுப்பு மாணவிகள் சாதனா மற்றும் சத்யா ஆகிய இருவரும் திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். திருக்குறள் போட்டியில் மாணவர்கள் வெல்வது வழக்கமான ஒன்றுதானே என்று நினைக்கலாம். இவர்கள் இருவரும் ஒலக்கூர் ஒன்றியத்தைச் சேர்ந்த, கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள். கூலி வேலைக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகள்.
கொரோனா அரசுப் பள்ளி மாணவிகளின் சுமார் 2 ஆண்டுகாலப் படிப்பைக் காவு வாங்கிய நிலையில், 1330 குறள்களையும் படித்து முடித்து பிப்ரவரி மாதம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் இருவரும் பரிசு பெற்றுள்ளனர்.
சாதனாவும் சத்யாவும் திருக்குறளில் அதிகாரம், முதல் சீர், இறுதி சீர் இப்படி எதைக் கேட்டாலும் சொல்லும் திறமை பெற்றவர்கள். 1 முதல் 1330 வரை எந்தக் குறளையும் தெளிவாக ஒப்பிக்கும் திறமை பெற்றவர்கள். உதாரணத்துக்கு 555ஆவது குறள் என்ன என்று கேட்டால், முழுக்குறளையும் விரைவாகவும் தெளிவாகவும் சொல்கின்றனர்.
இதுகுறித்து ஏபிபி நாடுவிடம் சாதனா பேசும்போது, ''அப்பா லாரி ஓட்டுநர், அம்மா கூலி வேலைக்குச் செல்கிறார். அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்புப் படிக்கிறேன். பாடங்களையும் இதே ஆர்வத்துடன் படிப்பேன்'' என்கிறார். சத்யாவின் அப்பா கூலி வேலைக்குச் செல்கிறார். அம்மா ஆடு மேய்க்கிறார். சத்யாவின் அக்காவும் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்புப் படித்து வருகிறார்.
எந்தக் குறளைக் கேட்டாலும் இருவரும் அதை அட்சரம் பிசகாமல் சொல்லிக் காண்பிக்கின்றனர். திருக்குறளில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்துப் பேசியவர்கள், ''4ஆம் வகுப்புப் படிக்கும்போது ஆசிரியர் ஆரோக்கியராஜ், எங்களுக்கு திருக்குறள் படிக்கப் பயிற்சி அளித்தார். ஆர்வத்துடன் படித்து ஓராண்டில் 300 திருக்குறள்களை முடித்தோம். குரோம்பேட்டை சென்று திருக்குறள் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பினோம். 6ஆம் வகுப்பில் 900 திருக்குறள்களை முடித்தோம். அடுத்த 2 ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு காலத்திலேயே முடிந்துவிட்டன. இதனால் படித்த குறள்கள் அனைத்தும் மறந்துவிட்டன.
ஆசிரியரின் வழிகாட்டலை அடுத்து கடந்த 2 மாதங்களாக மீண்டும் படிக்க ஆரம்பித்தோம். இப்போது 1,330 குறள்களும் எங்களுக்கு முழுமையாகத் தெரியும்.
சார் படி படி என்று சொல்லிக்கொண்டே இருக்க மாட்டார். விருப்பமிருந்தால் திருக்குறள் படியுங்கள், நிச்சயம் சாதிக்கலாம். வாழ்க்கைக்குப் பயன்படும், போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும். திருக்குறளை முழுமையாகப் படித்தால் பெருமை, மதிப்பு என்றும் சொன்னார். அதனால் குறளின்மீது எங்களுக்கே ஆர்வம் வந்துவிட்டது. எங்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர் ஆரோக்கியராஜுக்காவது போட்டியில் வெல்ல வேண்டும் என்று நினைத்துப் படித்தோம். வெற்றியும் பெற்றோம். தேசிய திறனறிவுத் தேர்வான என்எம்எம்எஸ் தேர்வுக்குத் தற்போது தயாராகி வருகிறோம்'' என்று இருவரும் தெரிவித்தனர்.
தன்னுடைய மாணவிகளின் வெற்றி குறித்துப் பேசிய ஆசிரியர் ஆரோக்கியராஜ், ''வெற்றிபெற்ற மாணவிகள் இருவருக்கும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஊக்கப் பரிசு விரைவில் வழங்கப்பட உள்ளது. இனி இவர்கள் வெளிநாட்டுத் தமிழர் அமைப்புகள் உட்பட அனைத்துத் தமிழ் சங்கங்கள், குழுக்கள் நடத்தும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவர்களைப் பார்த்து இன்னும் பல மாணவர்கள், திருக்குறள் முற்றோதலில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்'' என்று தெரிவித்தார்.
கற்றலுக்குப் பொருளாதாரம் என்றுமே தடையல்ல என்பதை இந்தத் திருக்குறள் அரசிகள் உணர்த்திச் செல்கின்றனர்.