UPSC Examination and Interviews: மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் ஒத்திவைப்பு..
UPSc Examination and Interviews: மே 9 அன்று நடைபெறவிருந்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈஓ/ஏஓ) ஆட்சேர்ப்பு தேர்வு, 2020, தள்ளி வைக்கப்படுகிறது
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சில முக்கியத் தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 2,59,170 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதே நேரத்தில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. உதாரணமாக, தமிழகத்தில் இன்று முதல் மாநிலம் முழுவதும் இரவு பத்து மணிமுதல் காலை நான்கு மணிவரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சத்தீஸ்கரில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மே 15-ஆம் தேதி வரை இரவு ஒன்பது மணிமுதல் காலை ஐந்து மணிவரை இரவுநேர ஊடரங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்தது.
தேர்வுகள் ஒத்திவைப்பு:
மாணவர்களின் மனநலம் மற்றும் ஆரோக்கியத்தில் கருத்தில்கொண்டு இந்தியாவில் பல்வேறு தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், மே 4 முதல் ஜூன் 14 வரை நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் சிபிஎஸ்இ வாரியம் முன்னதாக தெரிவித்தது. ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் என்று அழைக்கப்படும் ஐ.சி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் 27 முதல் 30-ஆம் தேதிவரை நடக்கவிருந்த ஜேஇஇ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் குறித்த முடிவு:
சில முக்கியத் தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து, மத்திய தேர்வாணையம் வெளியிட்ட வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றை நடத்துவது இயலாது என்பதால், 2021 மே 9 அன்று நடைபெறவிருந்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈஓ/ஏஓ) ஆள்சேர்ப்பு தேர்வு, 2020, தள்ளி வைக்கப்படுகிறது. இந்திய பொருளாதார சேவை/இந்திய புள்ளியியல் சேவை தேர்வு, 2020 (2021 ஏப்ரல் 20-23 வரை நடைபெறவிருந்தது), குடிமைப்பணி தேர்வு, 2020 (2021 ஏப்ரல் 26-ஜூன் 18 வரை நடைபெறவிருந்தது) ஆகியவற்றின் நேர்முக தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்பு தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகின்றன. தேவைக்கேற்ப நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, புதிய தேதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.