UPSC Result: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 1016 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Result 2023: யுபிஎஸ்சி நேர்காணல் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்.16) வெளியாகி உள்ளன. இதில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
UPSC CIVIL SERVICES EXAM Result: நாடு முழுவதும் அகில இந்திய குடிமைப் பணிகளில் சேர நடத்தப்படும் யுபிஎஸ்சி இறுதித் தேர்வில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வர்கள் https://upsc.gov.in/FR-CSM-23-engl-160424.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
யுபிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஐஇஎஸ் (IES) தேர்வு நடத்தப்படுகிறது.
மதிப்பெண்களின் அடிப்படையில் பணி
இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று, தெரிவு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நேர்காணல் முடிவுகள் இன்று (ஏப்.16) வெளியாகி உள்ளன. இதில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா (ADITYA SRIVASTAVA) பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதான் (ANIMESH PRADHAN) என்பவரும், மூன்றாம் இடத்தை டொனுரு அனன்யா ரெட்டி (DONURU ANANYA REDDY) என்னும் மாணவியும் பெற்றுள்ளனர்.
அதேபோல, ஐஏஎஸ் பணிக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியோர், பொதுப் பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 180 பேர் தேர்வாகி உள்ளனர். ஐஎஃப்எஸ் பணிக்கு மொத்தம் 37 பேரும் தேர்வாகி உள்ளனர். ஐபிஎஸ் பணிகளுக்கு 200 பேரும் தேர்வாகி உள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல குரூப் ஏ பிரிவுக்கு 613 பேரும், குரூப் பி பிரிவுக்கு 113 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 1,143 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2024-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு
மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவானது, ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது. 2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி குடிமைப்பணி முதல்நிலை தேர்வானது மே 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விரிவான அறிவிக்கைக்கு: https://upsc.gov.in/FR-CSM-23-engl-160424.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
கூடுதல் தகவல்களுக்கு: http//www.upsc.gov.in
தொலைபேசி எண்கள்: 23385271 / 23381125 / 23098543