TNPSC Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மறந்துடாதீங்க!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (23ம் தேதி) கடைசி நாள்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (23ம் தேதி) கடைசி நாள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதில் நேர்முகத் தேர்வில் 116 இடங்கள், நேர்முகத் தேர்வு அல்லாத இடங்களுக்கு 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல், ஆவணங்கள் சரிபார்ப்பு என 4 நிலைகளில் நடைபெறுகின்றன. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வு மே 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 32 நகரங்களில் 117 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன. அதற்குப் பிறகு முதன்மைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்வுகள் மாநிலம் முழுவதும் 20 நகரங்களில் நடைபெறும்.
முதல்நிலைத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். பொதுத்தமிழ் அல்லது பொதுத்தமிழ் ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு இரண்டும் சேர்த்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
முதன்மைத் தேர்வு
முதன்மைத் தேர்வு இரண்டு தாள்களாகப் பிரித்து நடத்தப்படும். முதல் தாளில், பத்தாம் வகுப்புத் தரத்தில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு நடத்தப்படும். 3 மணி நேரத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதன் மதிப்பெண்கள் தரவரிசையில் கணக்கில் கொள்ளப்படாது. எனினும் தாள் 1-ல் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தாள் 2 திருத்தப்படும்.
இரண்டாவது தாளில், பொது அறிவு பகுதியில் இருந்து 3 மணி நேரத்துக்கு 300 கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு 40 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
வயது வரம்பு
அனைத்துப் பதவிகளுக்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகபட்சமாக 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆ.தி. (அ), ப.ப., மி.பி.வ., பி.வ.(இஅ) மற்றும் பி.வ.(இ) ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. மாற்றுத்திறனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டு வரை வயது வரம்புச் சலுகை பெறத் தகுதியுடையவர்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/tnpsc/PIY0000001/notice/2022_03_CCSE_II_Notfn_Tamil_Final_2022-02-23_12-20-51.pdf என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற லிங்கில் விண்ணப்பிக்கலாம்.
வலைதள முகவரி- https://www.tnpsc.gov.in/