TNPSC Group 4 Result: எப்போதுதான் குரூப் 4 தேர்வு முடிவுகள்?- சமூக வலைதளங்களில் பொங்கிய தேர்வர்கள்; அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
TNPSC Group 4 Result 2023: தேர்வர்கள் கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்ததை அடுத்து மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Result 2023: தேர்வர்கள் கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்ததை அடுத்து மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வு என்பதால், இதற்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 7,301 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் தாமதமான நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் ஒரு வாரம் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், ’’தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் மாற்றுத் திறனாளிகள், ஏழைத் தேர்வர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் குரூப்4 தேர்வு முடிவை உடனே வெளியிட வேண்டும்’’ என்று தேர்வர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் நேற்று (மார்ச் 8) இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.
இந்த நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4 (குரூப் 4) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக் குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’.
இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.