TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 9: பெரியார், அண்ணா, இன்னும் பலர்- தமிழ் அறிஞர்களும், தொண்டும்!
இந்தப் பகுதியில் இருந்து உறுதியாக 5 கேள்விகள் வர வாய்ப்புள்ளன. மொத்தம் 7 பேர் இந்தப் பகுதியில் வருகின்றனர்.
உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.
குரூப் 4 பாடத்திட்டத்தின் பொதுத்தமிழ் தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் பகுதியில் முதல் 10 பகுதிகளை எவ்வாறு படிக்க வேண்டும் என்று பார்த்தோம். அடுத்த 6 பகுதிகளைப் படிப்பது எவ்வாறு என்று இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம். இதுகுறித்து விளக்குகிறார் தமிழினியன் பயிற்சி மையத்தின் நிறுவனர் நித்யா பிரபு.
தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்
11. தேவநேயப் பாவாணர்- அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்.
தேவநேயப் பாவாணர் அகரமுதலி திட்டத்தின் இயக்குநராக இருந்தவர். எழுத்துக்கள் அகர வரிசைப்படி அடுக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் அதனுடைய விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதே அகரமுதலி. அதாவது ஆங்கில அகராதிகளைப் போல, நம்முடைய தமிழ் அறிஞர்கள் அகர வரிசைப்படி ஒவ்வொன்றையும் எழுதி வைத்தனர். தமிழின் ஒட்டுமொத்தக் கலைக் களஞ்சியமே அகரமுதலி. அகரமுதலியைத் தேவநேயப் பாவாணர் எழுதியிருக்கிறார், வீரமாமுனிவர் எழுதியுள்ளார்.
கார் என்றால் மகிழுந்து. அது எதற்காக உருவாக்கப்பட்டது? யார் உருவாக்கினார்கள்? அதில் எத்தனை பேர் பயணிக்கலாம்? எத்தனை வகையான மகிழுந்துகள் உள்ளன என்பது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் தருவதே நிகண்டுகள், அகராதிகள். இவற்றைப் பாதுகாத்து வைக்கும் திட்டமே அகரமுதலித் திட்டம். அகரமுதலி குறித்த பாடத்திட்டங்கள் புதிய பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன. தேவநேயர் பற்றிய குறிப்புகள் பழைய எட்டாம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளன.
பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார் பற்றி ஆறாம் வகுப்பு முதல் பருவத்திலும் பத்தாம் வகுப்புப் புத்தகத்திலும் செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர், அவர் இயற்றிய நூல்கள், பிரபல மேற்கோள் வரிகள் ஆகியவற்றிலிருந்து அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.
12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள்
இது மிக மிக முக்கியமான பகுதி. இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஜி.யு.போப் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்தவர். தமிழ் மீது பேரார்வம் கொண்டு, அதிலேயே மூழ்கி பல நூல்களை எழுதினார். தன்னுடைய கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று எழுதச் சொன்னவர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். திருவாசகம் புறப்பொருள் இன்ப மாலை உள்ளிட்ட பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். இவர் குறித்த பாடக்குறிப்புகள் பன்னிரண்டாம் வகுப்பிலும் பழைய எட்டாம் வகுப்பிலும் வருகின்றன.
வீரமாமுனிவர்
வீரமாமுனிவர் பல மொழிகள் கற்றவர். தமிழின் மீது ஆர்வம் கொண்டு பல நூல்களை லத்தீன் மொழிக்கு மொழிபெயர்த்தவர். இவர் குறித்த குறிப்புகள் புதிய பத்தாம் வகுப்பிலும் பழைய எட்டாம் வகுப்பிலும் வருகிறது. தமிழகம் வந்தபோது தைரியநாதர் என்று தன்னை அழைத்துக் கொண்டார். அது வடமொழிச் சொல்லாக இருப்பதால் வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். இவரின் பெயர்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
13. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்து ராமலிங்கர் - அம்பேத்கர்- காமராசர் - ம.பொ.சிவஞானம் - காயிதே மில்லத் - சமுதாயத் கொண்டு.
இந்தப் பகுதியில் இருந்து உறுதியாக 5 கேள்விகள் வர வாய்ப்புள்ளன. மொத்தம் 7 பேர் இந்தப் பகுதியில் வருகின்றனர். 2021 குரூப் 1 தேர்வில் தந்தை பெரியார் பற்றி மட்டுமே ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. திராவிட ஆட்சிக் காலம் என்பதால் பெரியார் மற்றும் அண்ணாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். தேர்வுக்குரிய வியூகத்தில் கேள்விகள் எப்படி கேட்கப்படும் என்பதை யோசித்து அந்த வகையில் எழுவர் குறித்தும் படித்துக் கொண்டால் போதும். இந்தத் தலைவர்கள் மேற்கொண்ட சமுதாயத் தொண்டுகள் முக்கியமானவை.
தந்தை பெரியார்
தந்தை பெரியார் குறித்து புதிய ஒன்பதாம் வகுப்புப் புத்தகத்திலும் பழைய 6, 10-ம் வகுப்புப் புத்தகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து வெளியிலிருந்தும் கூட (தேவிரா எழுதிய கலைக் களஞ்சியம்), கூடுதல் தகவல்களைப் படித்து வைத்துக் கொள்ளலாம்.
பேரறிஞர் அண்ணா
அண்ணாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா புதிய ஒன்பதாம் வகுப்பு புத்தகத்திலும் பழைய பத்தாம் வகுப்புப் புத்தகத்திலும் வருகிறார். முந்தைய அத்தியாயத்தில் தம்பிக்கு எழுதிய கடிதம் பகுதியில், அண்ணா வந்திருப்பார். இந்த இரண்டையும் படித்தால் போதும்.
முத்துராமலிங்கர் குறித்தும் கேள்விகள் கேட்கப்படுகின்றன இவர் குறித்து புதிய ஏழாம் வகுப்பு முதல் பருவத்திலும் பழைய ஆறாம் வகுப்புப் புத்தகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டையும் தெளிவாகப் படித்தால் போதும்.
அம்பேத்கர்
அம்பேத்கரும் முக்கியமானவர். இவர் புதிய எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவத்திலும் பழைய பத்தாம் வகுப்பு புத்தகத்திலும் வந்திருக்கிறார். இவர் குறித்து படிப்பதால், அரசமைப்புப் பகுதியையும் ஓரளவு முடித்துவிட முடியும்.
காமராசர்
பெருந்தலைவர் காமராசர் எப்போது முதலமைச்சர் ஆனார்? அவர் கொண்டு வந்த திட்டங்கள் என்னென்ன? முதலமைச்சர் ஆவதற்கு முன்னதாக என்ன செய்து கொண்டிருந்தார்? அதற்குப் பிறகு என்ன செய்தார்? ஏன் தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் படிக்க வேண்டியது அவசியம். காமராசர் பற்றி புதிய ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவத்திலும் பழைய ஒன்பதாம் வகுப்புப் புத்தகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ம.பொ.சிவஞானம் குறித்துப் பத்தாம் வகுப்புப் புத்தகத்தில் உள்ளது. இவர் குறித்து தற்போது புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் திருத்தணியையும் கன்னியாகுமரியையும் தமிழ்நாட்டோடு இணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.
காயிதே மில்லத் பற்றிய குறிப்புகள் ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவத்தில் உள்ளன. புதிய பாடத்திட்டத்தில் அவர் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. காயிதே மில்லத் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். திண்டுக்கல் பகுதியில் ஆளுமை மிக்கவராக இருந்தார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர். கட்சி பணம் தனி, சொந்தப் பணம் தனி என்பதை உறுதியாக கொள்கையாகவே பின்பற்றியவர்.
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
பழைய தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஊர்கள் எப்படி இருந்தன? தமிழக ஊர்கள் எப்படி எல்லாம் மருவி உள்ளன? முன்பு எவ்வாறு இருந்தன என்பது குறித்த குறிப்புகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நூல் குறித்து ஏழாம் வகுப்பு பழைய புத்தகத்திலும் பழைய ஆறாம் வகுப்பு 3ஆம் பருவம் பாடப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. தமிழகம் - ஊரும் பேரும் என்ற நூலை ரா.பி.சேதுப்பிள்ளை எழுதியுள்ளார் என்பதால், அவர் குறித்த குறிப்புகளையும் படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்.
உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்கள்? இப்போது எப்படி உள்ளனர்? அவர்களின் சிறப்புகள், படைப்புகள் என்னென்ன? அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்னென்ன? என்பது குறித்துப் படிக்க வேண்டும்.
கோயில் திருவிழாக்கள் எங்கெல்லாம் நடக்கின்றன? குறிப்பிட்ட கோயில்கள் எங்கு உள்ளன? என்பது குறித்தும் கொடுக்கப்பட்டிருக்கும். கடந்த அத்தியாயத்தில் பார்த்த திராவிட மொழிகள் பகுதியிலும் இதுகுறித்த பகுதிகள் இருக்கும். இதுபற்றிப் பழைய 9-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. புதிய 9-ம் வகுப்புப் புத்தகத்திலும் சில வரிகள் இடம்பெற்றிருக்கும்.
முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..
TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப் பணி 7: தமிழ் இலக்கியத்தில் 100 மதிப்பெண்கள் சாத்தியமே!
TNPSC Group 4 Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 5: தமிழ் இலக்கணம் இனி எளிது... இனிது..!
TNPSC Preparation | உள்ளங்கையில் அரசுப்பணி 3: பொதுத்தமிழில் 100-க்கு 100 பெறுவது எப்படி?
TNPSC Exam Preparation | உள்ளங்கையில் அரசுப் பணி 2: முதல் முயற்சியிலேயே வெல்வது எப்படி?
TNPSC Govt Jobs | உள்ளங்கையில் அரசுப் பணி 1: இன்னும் ஏன் இந்த தாமதம்?